"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Su.tha Arivalagan
Sep 05, 2026,07:38 PM IST

சென்னை : திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு சொப்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக முன்னாள் அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் குறி வைத்து நடத்தப்படும் இந்த சோதனைகள் அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை:


திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேருவை முடக்கும் நோக்கிலும், மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளையே ‘ரீல்ஸ் அரசு’ கையிலெடுத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் ரீதியாக திமுகவை எதிர்கொள்ள முடியாதவர்கள், விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும், இதுபோன்ற மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் பணியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


“மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது”




"கே.என்.நேருவும், திமுகவும் புதிய அரசின் இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்" என்று உறுதியளித்துள்ள மு.க.ஸ்டாலின், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த வழக்குகளையும் சோதனைகளையும் எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். திமுக வரலாற்று ரீதியாக பல சோதனைகளையும் நெருக்கடிகளையும் கடந்து வந்த இயக்கம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் கழகத்தின் மக்கள் பணியையோ அல்லது கொள்கைப் பயணத்தையோ எந்த வகையிலும் முடக்க முடியாது என்று வலியுறுத்தினார்.


பரபரப்பான அரசியல் சூழ்நிலை:


கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் திடீரென நடத்தப்படும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆங்காங்கே கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.