மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், "மேகதாது அணையைக் கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது" என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியிருப்பது தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இனியும் அமைதியோ, மௌனமோ காக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், காவிரி என்பது வெறும் நீர்ப்பங்கீடு என்பதைத் தாண்டி, வரலாற்றுப் பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் காவிரியை நம்பித்தான் இருக்கிறது என்றும், காவிரி உரிமையைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி உரிமையில் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்படுவதைப் போல, தமிழ்நாட்டின் ஒற்றுமையையும் கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்கு நமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய குழு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகத் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை, தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.