திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
சென்னை : காங்கிரஸ் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பு, தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு போன்ற முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதித்தது. காங்கிரஸ் கட்சி, இந்த முறை அதிக தொகுதிகளைக் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில், ஐந்து பேர் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) குழு, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. தேர்தல் வியூகம், பிரச்சாரத் திட்டங்கள் மற்றும் கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
புதிய பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் இருந்து 35 முதல் 40 தொகுதிகள் வரை கேட்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதித் தொகுதிப் பங்கீடு, திமுகவின் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். இந்த சந்திப்பு, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு விலகப் போவதாக வெளியான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை திமுக.,விடம் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் முடிவு செய்துள்ள காங்கிரஸ், சமீபத்தில் சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, காங்கிரசிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கக் கூடிய 125 தொகுதிகளை கண்டறிந்துள்ளது. இவற்றில் முக்கியமான 35 முதல் 40 தொகுதிகளை கேட்டு பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அதே திமுக கூட்டணியில் இந்த முறை காங்கிரசிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருக்கிறார்களாம். கடந்த முறை ஒதுக்கிய 25 லிருந்து கொஞ்சம் உயர்த்தி, 28 ஆக்க திட்டமிட்டுள்ளதாம். காங்கிரசிற்கு 28, அதன் சார்புடைய இஸ்லாமிய கட்சிகளுக்கு 2 என காங்கிரஸ் தரப்பிற்கு மொத்தமாக 30 இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்து விட்டதாம். இதில் வெற்றி வாய்ப்புகளை பெறுவது எப்படி, பிரச்சார வியூகங்கள் என்ன என்பது பற்றி தான் நேற்று நடந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.