பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

Su.tha Arivalagan
Sep 17, 2026,01:03 PM IST

சென்னை : தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவிற்கு நிதி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் காவல் துறையினர் நாளை நேரில் விசாரணை நடத்தவுள்ளனர்.


சோதனையில் சிக்கிய 118 ஆவணங்கள் : 


இந்த நிதி மோசடி வழக்கு தொடர்பாக, அன்பில் மகேஷ் மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சமீபத்தில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருச்சி தென்னூர், வாளாடி மற்றும் சென்னையின் தி.நகர், பசுமை வழிச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த அதிரடிச் சோதனையில், சுமார் 118 முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் கணினி ஆய்வு : 




சோதனையின் போது அன்பில் மகேஷின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை காவல்துறையினர் மற்றும் தடையவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில் நீக்கப்பட்ட கோப்புகள் (Deleted files), வங்கிப் பரிவர்த்தனைத் தரவுகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் மேற்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் தொடர்புகள் குறித்த டிஜிட்டல் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


நாளை தீவிர விசாரணை :


கைப்பற்றப்பட்ட 118 ஆவணங்கள் மற்றும் கணினியிலிருந்து திரட்டப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், அன்பில் மகேஷிடம் நாளை நேரில் விசாரணை நடத்த காவல்துறையினர் முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.


பணப் பரிவர்த்தனை: தனியார் பள்ளிகளிடம் பெறப்பட்டதாகக் கூறப்படும் ரூ.100 கோடி தொகை யார் யாருடைய கணக்குகளுக்கு மாற்றப்பட்டது?


அதிகார தவறாகப் பயன்பாடு: பள்ளிகளுக்கான அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்குவதில் அதிகார வரம்பு மீறப்பட்டதா?


கூட்டுச் சதி: இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?


என்ற பல்வேறு முக்கியக் கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்தகட்டமாக அன்பில் மகேஷூம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது திமுக.,வினர் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.