CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் எதிர்பாராத வகையில் தோல்வியைச் சந்தித்துள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் இல்லாத சட்டசபையை திமுக சந்திக்கவுள்ளதும் அக்கட்சியினரை பெரும் வேதனையில் மூழ்கடித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில், சட்டமன்ற வரலாறு என்பது மிக நீண்டு நெடியது. முக்கியமான ஒரு அத்தியாயம். ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர், தற்போது மாநிலத்தின் முதல்வர் என அவர் கடந்து வந்த பாதை வியப்பிற்குரியது.
மு.க. ஸ்டாலின் முதன்முதலில் 1989 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இது அவரது நாடாளுமன்ற ஜனநாயகப் பயணத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். அதில் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியையும் தோற்கடித்துள்ளார்.
2011 முதல் தொகுதி மாறினார் மு.க.ஸ்டாலின். கொளத்தூர் தொகுதியிலிருந்து போட்டியிட ஆரம்பித்தார். 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த மு.க.ஸ்டாலின், தற்போதைய தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
மிகப் பெரிய நம்பிக்கையில் இருந்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வெற்றி பற்றிக் கவலைப்படாமல், 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்ற அசாத்தியமான நம்பிக்கையில் இருந்து வந்தார். ஒரு இளைஞரைப் போல சுறுசுறுப்பாக மாநிலம் முழுவதும் சுற்றி வந்தார். அடுத்தடுத்து அதிரடிகளையும் அவர் கொடுத்து வந்தார். இந்த நிலையில் ஸ்டாலினின் தோல்வி, திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலத்தில் படிப்படியாக ஒவ்வொரு பதவியாக உயர்ந்தவர் ஸ்டாலின். கடினமான உழைப்பாளி. திமுகவின் வளர்ச்சியில் இவரது பங்கும் மிக முக்கியமானது. கலைஞர் மறைவுக்குப் பின்னர் கட்சியைக் கட்டிக் காத்து கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் மு.க.ஸ்டாலின்.
திமுக இளைஞர் அணிச் செயலாளராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக , திமுக செயல் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வராக , திமுக தலைவராக திறம்பட செயலாற்றியவர் ஸ்டாலின் என்பதில் சந்தேகம் இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்த அனுபவம் கொண்டவர். எதிர்க்கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு கொளத்தூர் மக்கள் தோல்வியைப் பரிசாக கொடுத்திருப்பது ஆச்சரியம் தருவதாக அமைந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லாத சட்டசபையை திமுக சந்திக்கப் போகிறது. இது அக்கட்சியினரை பெரும் ஏமாற்றத்திலும், வேதனையிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.