SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
Nov 03, 2025,12:21 AM IST
சென்னை: உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருப்பது சரியல்ல. அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று திமுக சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் போடப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணிகளை மேற்கொள்ளப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளும் இதை எதிர்த்துள்ளன.
இந்த நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க திமுக சார்பில் இன்று சென்னை தி.நகரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தவெக, நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட 21 கட்சிகள் வரவில்லை. அதிமுக, பாஜகவுக்கு திமுக சார்பில் அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்துப் பேசினர். இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், சார் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.