சட்டசபைத் தேர்தல் 2026.. திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு: கனிமொழி எம்.பி தகவல்
சென்னை : 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பி முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைய துவங்கி உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு விட்டது. இந்நிலையில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. திமுக தேர்தல் தயாரிப்பு குழுவிற்கு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்காக 2வது நாளாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் கூட்டமும் கனிமொழி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த முறை திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்த முக்கிய தகவல்கள் சிலவற்றை கனிமொழி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, இது தேர்தலின் "கதாநாயகியாக" (Heroine) திகழும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர் சங்கங்கள் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இந்த அறிக்கை இறுதி செய்யப்படுகிறது.கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு எவ்வாறு நிறைவேற்றியுள்ளதோ, அதே போல் புதிய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்களும் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் 2026 தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, மக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை கனிமொழி தலைமையிலான குழுவினர் வடிவமைத்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று பல்வேறு அமைப்புகளிடம் பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இந்த அறிக்கை தயாராகி வருகிறது. திமுக.,வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இந்த முறை தேர்தல் அறிக்கை மிக கவனமாக தயாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.