“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
சென்னை : தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“மக்களிடம் கேளுங்கள்...” :
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “முதலமைச்சர் விஜய் தயவுசெய்து விலைவாசி உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவரிடம் கேட்டால், ‘எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது’ என்று தான் சொல்வார். பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டிய மக்கள், தற்போது விலைவாசி உயர்வால் அச்சத்திலும் கவலையிலும் உறைந்துபோய் இருக்கிறார்கள். உண்மை நிலையை அறிய வேண்டுமானால், நேரடியாக மக்களிடம் சென்று கேளுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் போகலாம்... மளிகைக் கடைக்கும் போங்க!
மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலப் பயணங்களைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “முதலமைச்சர் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும், அதில் தவறில்லை. ஆனால், அப்படியே உள்ளூரில் இருக்கும் ஏதேனும் ஒரு மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய் பாருங்கள். அப்பொழுது தான் மக்களுக்கு அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் ஏற்படும் சிரமங்களும், சந்தையில் நிலவும் உண்மை நிலவரமும் உங்களுக்குத் தெரியும்” எனத் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பும் அரசியல் சூழலும் :
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய நடுத்தரக் குடும்பங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.