"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Sep 21, 2026,01:55 PM IST

சென்னை:புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகத் தமிழக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். அத்துடன், மீனவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் தவெக அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.   


மக்களை ஏமாற்றும் மோசடிச் செயல்:


புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகத் தமிழக அரசு இன்னும் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசி வருவது, மக்களை ஏமாற்றும் ஒரு மோசடிச் செயலாகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அரசாணை வெளியிட்ட பின்னரும் கூட, இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சொல்லும் அளவுக்குத் தான் இவர்களின் நிர்வாக அறிவு இருக்கிறதா? அல்லது வாக்களித்த மக்களும், எதிர்க்கட்சிகளும் இவர்கள் எந்தப் பொய்களைச் சொன்னாலும் அதை நம்பிவிடுவார்கள் என நினைக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  


 பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்:




பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளைத் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், "அராஜகப் போக்குடனும், ஆணவ எண்ணத்துடனும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தமிழக அரசு தொடர்ந்தால், அதனை திமுக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தெரிவித்துள்ளார். 


மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் :


மீனவர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் தவெக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மீனவ மக்களுடன் இணைந்து திமுக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். அரசாணை வெளியிட்ட பிறகும் தவறானத் தகவல்களைப் பரப்பி மக்களைத் திசைதிருப்ப முயலும் அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவரின் இந்த அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.