அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

Su.tha Arivalagan
Sep 17, 2026,04:08 PM IST

சென்னை : திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி.,யுமான கனிமொழி தனது பெயரை கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்று அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மாற்றி உள்ளார்.


திமுக எம்.பி., கனிமொழி இதுவரை தனது பெயரை அனைத்து அரசு ஆவணங்களிலும் கனிமொழி கருணாநிதி என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது பெயரில் தனது அம்மா ராஜாத்தி அம்மாளின் பெயரையும் இணைத்து, கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


பொதுவாக ஒருவர் தனது பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அரசிதழில் திருத்தம் செய்து, வெளியிடப்பட வேண்டும். அதன் அடிப்படையில் கனிமொழி தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். இதன்படி, அரசு ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இனி இவரது பெயர் "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி" என மாற்றம் பெறுகிறது. இதுவரை அரசு ஆவணங்களில் "கனிமொழி கருணாநிதி" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் என இதுவரை கனிமொழி தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. 




டில்லியில் செல்வாக்குமிக்க தமிழக தலைவர்களில் ஒருவராக கனிமொழி திகழ்ந்து வருகிறார். இவர் தமிழக அரசியலுக்கு வர வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் பலரும் பல காலமாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர். தற்போது எம்.பி.,யாக இருக்கும் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அதனால் தனது எம்.பி., பதவிக்காலம் முடிந்த பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ அவர் தமிழக அரசியலில் தீவிரம் காட்ட துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவரது இந்த பெயர் மாற்றம் தமிழக அரசியலில் மிகவும் கவனிக்கதக்கதாக கருதப்படுகிறது.


2026 தமிழக சட்டசபை தேர்தலிலேயே கனிமொழி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவருக்காக கட்சியில் பலரும் விருப்பமனு அளித்திருந்தார்கள். ஆனால் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் போனது அவரது ஆதரவாளர்களை ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் இந்த திடீர் பெயர் மாற்றம் அவரது தமிழக அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.


அதே சமயம் திமுக.,வில் ஏற்கனவே கனிமொழி என்ற பெயரில் ஒரு எம்.பி., இருக்கிறார். அதோடு தற்போது பதவியேற்றுள்ள தவெக.,விலும் கனிமொழி என்ற பெயரில் எம்எல்ஏ.,ஒருவரும் இருக்கிறார். சமீபத்தில் கனிமொழி எம்.பி., பேசிய கருத்து, கனிமொழி கருணாநிதி தெரிவித்த கருத்து என பரவி அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரே பெயரில் இருப்பவர்களால் ஏற்படும் இது போன்ற குழப்பங்களை தவிர்ப்பதற்காகவும் அவர் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.