போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் அவையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டி, முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நெருக்கடி நிலைக் காலத்தில் (மிசா) திமுக அரசு கலைஞர் தலைமையில் போராடியதால் 1976 ஜனவரி 31 அன்று ஆட்சி கலைக்கப்பட்டது. மறுநாளே கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த காவல்துறையினரிடம், அன்றைய தினம் பிரச்சாரத்தில் இருந்த என்னை மறுநாள் நானே நேரில் அழைத்து அவரிடம் ஒப்படைப்பதாகக் கூறி கலைஞர் அனுப்பினார்.
கைது செய்யப்பட்ட நான், சிறையில் தொழுநோயாளிகள் அடைக்கப்பட்ட பகுதியில் 10 பேருடன் அடைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைக்கு உள்ளானேன். இரவு நேரங்களில் லத்தி அடி, பூட்ஸ் கால்களால் உதைபட்டோம். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலேயே உயிரிழந்தார்.
நீங்கள் பேரவையில் சுட்டிக் காட்டினீர்களே தாடைப் பகுதியை தொட்டுக் காட்டி, அது உண்மைதான். எனது தாடை எலும்பு உடைந்தது. அன்றைய அடியின் வடுக்கள் இன்றளவும் என்னிடம் உள்ளன. எனது போராட்ட வரலாற்றை அறிய விரும்பினால், சட்டமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் படித்துப் தெரிந்து கொள்ளலாம்.
சர்க்காரியா கமிஷன் மற்றும் கலைஞர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை வரலாறு அறிந்தது. மத்தியில் எத்தனையோ ஒன்றிய அரசுகள் அதன் பிறகு அமைந்தன. குற்றச்சாட்டு உண்மை என்றால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் அல்லவா.
அமலாக்கத்துறை (ED) தொடுத்த வழக்குகளில் 95% குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் சந்தேகத்தின் பேரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசுக்கு எதிரான உங்கள் அரசியல் நிலப்பாட்டைப் பற்றிப் பேசும்போது, எதனடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள்?
சட்டமன்றம் என்பது மாபெரும் தலைவர்களால் செதுக்கப்பட்ட இடம். அங்கு சட்டம்-ஒழுங்கு, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதை விடுத்து, தேவையற்ற சர்ச்சைகளைப் பேசக் கூடாது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு உரிய சொல்லாட்சியும் உடல்மொழியும் இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் சட்டமன்றத்தையே ‘ரீல்ஸ்’ செய்யும் தளமாக மாற்றி, நாங்கள் கட்டிய பாலத்தில் நின்று போட்டோஷூட் நடத்துவதைப் போல ஆட்சியை ஒரு சினிமா சூட்டிங் போல நடத்தி வருகிறீர்கள். உங்களின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்கவே இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கிறீர்கள்.
பறந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, கடன் தள்ளுபடி வாக்குறுதி, மகளிருக்கான உரிமைத் தொகை என வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இந்த அரசை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் வளர்ச்சிளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம். தாத்தா, தந்தை காலத்தைத் தொடர்ந்து தற்போதும் மக்களுக்காகப் போராடுவதே திமுகவின் என்றும் மாறாத வரலாறு என்று தனது வீடியோவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது வீடியோ உரையில் என் வீட்டுக்கு வந்தபோது என்னைச் சந்தித்தபோது, பிரச்சாரத்தின்போது உங்களை கடுமையாக விமர்சித்து விட்டேன். ஐ அம் சாரி என்று சொன்னீர்கள். அதற்கு நான் பரவாயில்லை பிரதர், இப்போது நீங்கள் முதல்வராகி விட்டீர்கள். அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினேன். அதை நீங்கள் மறந்து விட்டீர்களா என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். அத்தோடு போராளிகளின் வரலாற்றைப் படியுங்கள் தம்பி என்றும் முதல்வர் விஜய்க்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.