நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
சென்னை: புதுடெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம், இப்போது நாடு முழுவதன் கவனத்தையும் ஈர்த்துள்ளது. NEET தேர்வு பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை முதன்முதலில் எச்சரித்தது நாங்கள்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சியினரின் போராட்டம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான உணர்வுகள் எழ ஆரம்பித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்தும் மாணவர்களின் போராட்டம் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திமுக தொடக்கம் முதலே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது; அது ஏற்படுத்தும் ஆபத்துகளையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்ந்து, முதலாவது அரசியலமைப்புத் சட்டத்திருத்தத்திற்குப் பாதையமைத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது: AbolitionOfNEET (நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்).
மற்ற அனைத்து கோரிக்கைகளையும் விட, நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதன் மூலம் மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் கடுமையாக போராடி வருகிறது, எதிர்த்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். தமிழ்நாட்டில் பாஜக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஓரணியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.