நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jul 23, 2026,10:40 AM IST

சென்னை: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) தேர்வு, தனது முதன்மையான நோக்கங்களை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோற்றுவிட்டது. கல்வி தொடர்பான முடிவுகளில் மத்திய அரசு இனி மாநில அரசுகளை நம்ப வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தி இந்து நாளிதழில் இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை:


மாணவர்களின் சுமையைக் குறைப்பது, மருத்துவக் கல்வியின் வணிகமயமாக்கலைத் தடுப்பது மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஆகிய மூன்று முதன்மை வாக்குறுதிகளையுமே நீட் தேர்வு நிறைவேற்றத் தவறிவிட்டது.


பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கற்றல் மையங்களை பள்ளிகளிலிருந்து விலையுயர்ந்த நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு (Coaching Centres) நீட் தேர்வு மாற்றி அமைத்துவிட்டது.




நீட் தேர்வில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் சிக்கல்கள் வெறும் நடைமுறைச் சார்ந்தவை அல்ல, அவை நீட் அமைப்பின் கட்டமைப்பு ரீதியான கோளாறுகள் ஆகும். டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் இந்த கவலையை உறுதிப்படுத்தியுள்ளன.


ஒன்றிய அரசு இந்த போராட்டங்களை ஒரு விழிப்புணர்வு அழைப்பாகக் கருதி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவச் சேர்க்கை நடைமுறைகளை அந்தந்த மாநில அரசே தீர்மானிக்கும் வகையில் மாநிலங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.


டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர் சமூகத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.