‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தற்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளால் பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். "Why Silent CM?" என்ற கேள்வியோடு, சவாலும் சவடாலும் விட்ட முதலமைச்சர், எப்போது தனது 'Silent Mode'-இல் இருந்து வெளியே வருவார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"திறமையான (Efficient) அதிகாரிகளை நியமித்துவிட்டேன்... சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன் என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு, இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, தங்களது பிஞ்சுக் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் ஓலமும் அழுகுரலும் கேட்கவில்லையா?"
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
மக்களின் பாதுகாப்புக்கு 'கால்ஷீட்' எப்போது?
"மக்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் எப்போது 'கால்ஷீட்' கொடுப்பார்?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாகக் கேட்டுள்ளார். வெறும் விளம்பர அரசியலை மட்டுமே நம்பி, கள யதார்த்தத்தை உணராமல் அரசு நிர்வாகம் தூங்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் வேளையில், ஸ்டாலினின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள், அரசு நிர்வாகம், டில்லி பயணம் என பலவற்றையும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து மிக கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.