தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

Su.tha Arivalagan
Jun 13, 2026,03:53 PM IST

சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.


தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் அரசியல் தார்மீகமற்ற செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசியிருப்பது சூட்டைக் கிளப்புவதாக உள்ளது.


சென்னையில் இன்று திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தின் போது, தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தவெகவினர் மேடைதோறும் முழங்கினார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 




கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. 'தவெக அரசிடம் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்' என்று மக்கள் கதறும் அளவிற்குத் தமிழ்நாட்டின் அவல நிலை இன்று மாறியுள்ளது. ஆளுங்கட்சியினர் பலரே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு இதை ஒடுக்கத் தவறிவிட்டது என்றார் மு.க.ஸ்டாலின்.


தவெக அரசின் அரசியல் தார்மீகத்தைக் கேள்விக்குள்ளாக்கிய மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற ஜனநாயகத்தை முதல்வர் விஜய் கேலிக்கூத்தாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். "நேர்மையான அரசியல், தூய்மையான நிர்வாகம் என்று வாய்கிழியப் பேசிய முதல்வர் விஜய், தற்போது ஆட்சியைத் தக்கவைப்பதற்காகக் குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறார். பல மாநிலங்களில் பாஜக அரசு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்ததைப் போல, இங்கும் 'குதிரை பேர' வேகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் விலைக்கு வாங்கி வருகிறார். அதிமுக.,வை தீர்ந்து போன சக்தி என்றீர்களே, இப்போது நீங்கள் என்ன காய்ந்த போன சக்தியா?" என்று குற்றம் சாட்டினார். தூய்மை அரசியல் என்ற தவெகவின் முகமூடி இதன் மூலம் கிழிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


முதலமைச்சருக்கே கான்பிடன்ஸ் இல்லையே!




முதலமைச்சர் விஜய்க்குத் தன் சொந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், தவெக அரசு இன்னும் மூன்று மாதங்கள் கூடத் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டதாகக் கூறினார். ஆரம்பத்தில் புதிய அரசுக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க நினைத்ததாகவும், ஆனால் ஒரு மாதத்திற்குள்ளேயே நிலைமை மிக மோசமடைந்துள்ளதால் எதிர்க்கட்சியாகத் தங்களால் மௌனம் காக்க முடியவில்லை என்றும் விளக்கமளித்தார்.


நிர்வாகத் திறமையின்மை, சட்டம் ஒழுங்குத் தோல்வி மற்றும் தார்மீகமற்ற குதிரை பேர அரசியல் காரணமாகத் தவெக அரசு மக்கள் மத்தியில் மிக விரைவாகவே செல்வாக்கை இழந்து வருவதாகத் தனது உரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.