காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
சென்னை : த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்க நடைபெற்ற குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி மற்றும் நிபந்தனை முன்ஜாமீன்:
த.வெ.க எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் கடந்த சில நாட்களுககு முன் வழங்கியிருந்தது. அந்த நிபந்தனையின்படி, அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் இருவேளையும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
காவல் நிலையத்தில் ஆஜராகாத செந்தில் பாலாஜி:
நீதிமன்றம் விதித்த இந்த நிபந்தனையின் அடிப்படையில், செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக 2வது நாளாக ஆஜராகவில்லை. இந்நிலையில், காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளவை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன:
1. முன்ஜாமீன் நிபந்தனைப்படி திருல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினசரி ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
2. டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளதால், அது தொடர்பாகத் தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
3. விலக்கு அளிக்கப்படும் காலம் முடிந்த பிறகு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி கண்டிப்பாகத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிவிடுவேன் என்று மனுவில் உறுதி அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தாலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்து, நேற்று அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதனால் விரைவில் அவரை காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி எங்கிருக்கிறார் என தெரியாமல் இருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சமயத்தில் தான் அவர் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தள்ளுபடி செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல உள்ளதாகவும், அதற்காக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் புதிய மனு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.