SIR.. தேர்தல் ஆணைய திட்டத்தை எதிர்த்து.. திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR)யை கடுமையாக விமர்சித்துள்ளார். இதை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டமும் நடைபெறவுள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
SIR செயல்முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை திருத்துவதை திமுக எதிர்க்கவில்லை. ஆனால் "அவசரமான, தெளிவற்ற, பிழையான" செயலாக்கத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நேர்மையான தேர்தலுக்கு சரியான மற்றும் உண்மையான வாக்காளர் பட்டியலே அடிப்படை.
SIR பணி போதுமான நேரமோ, தெளிவோ இல்லாமல் அவசரமாக நடத்தப்படுகிறது. நன்கு படித்தவர்களுக்கே இந்த படிவத்தை நிரப்புவது தலை சுற்ற வைக்கும். தனிப்பட்ட மற்றும் "உறவினர் விவரங்கள்" வரையறை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதே இதற்கு ஒரு உதாரணம்.
பி.எல்.ஓ.க்கள் (Block-Level Officers) வீடுகளுக்குச் செல்லவில்லை, குறைந்த எண்ணிக்கையிலான படிவங்களை மட்டுமே வை,த்துள்ளனர். அல்லது ஒரு நாளைக்கு சுமார் 30 படிவங்களை மட்டுமே வழங்குகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவான டிசம்பர் 7 ஆம் தேதிக்கு முன், சுமார் மூன்று லட்சம் படிவங்களை அதிகாரிகள் எவ்வாறு விநியோகித்து செயலாக்க முடியும். இந்த வேகத்தில், அவர்கள் எப்படி முடிக்க முடியும்? இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற எங்கள் பயத்தை உறுதிப்படுத்துகிறது.
மாநில தேர்தல் அதிகாரி புகைப்படங்களை ஒட்டுவது அவரவர் விருப்பம் என்று கூறியிருந்தாலும், படிவத்தில் ஏன் புகைப்படங்கள் கேட்கப்படுகின்றன. சிறிய தவறுகள் கூட வாக்காளர்களை நீக்குவதற்கு வழிவகுக்கும். இறுதி முடிவு வாக்காளர் பதிவு அதிகாரிகளின் (EROs) விருப்பப்படி இருக்கும். முதல் தவறு ஒரு முழுமையான தவறு.
பொதுமக்கள் தங்கள் பி.எல்.ஓ.க்களைத் தேடிச் செல்லுங்கள். படிவங்களைச் சரியாகப் பெற்று நிரப்பி, சமர்ப்பித்து, ஒப்புதல் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாக்கு நீக்கப்படுமா என்று கேட்டால், உறுதியான பதில் சொல்ல முடியாது. வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு மட்டுமே ஒரே வழி.
SIR செயல்முறையின் போது குடிமக்களுக்கு உதவ, திமுக ஒரு உதவி எண்ணை (80654 20020) அறிவித்துள்ளது. இது திமுக உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். உங்கள் வாக்கை திருடும் ஆபத்து உங்கள் வாசலை எட்டியுள்ளது. ஒன்றிணைந்து செயல்படுவோம், விழிப்புடன் இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.