பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Su.tha Arivalagan
Aug 05, 2026,03:35 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.


பெயர் மாற்றமும் 'ஸ்டிக்கர்' அரசியலும்:

பட்ஜெட் தாக்கலுக்கு உரைக்கு பிறகு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்குப் புதிய அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன் பெரும் மாற்றம் தருவோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால், இங்கு நடந்துள்ளது என்னவென்றால் வெறும் 'பெயர் மாற்றம்' மட்டுமே.




திமுக அரசால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மட்டுமே தற்போதைய அரசு மாற்றி அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதற்காகவா இத்தனை நாட்களாக அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்? மேகதாது அணையை கட்டும் கர்நாடகாவை கண்டிக்க இந்த அரசிற்கு வக்கில்லை" என கேள்வியும் விமர்சனமும் எழுப்பினார்.


வாக்குறுதிகள் என்னாயிற்று?

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று சாடினார். "தேர்தல் நேரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்த எந்தவொரு தெளிவான பாதையும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த முதல் பட்ஜெட் முற்றிலும் பூஜ்ஜியமாகவே இருக்கிறது" எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.


ஒன்றுமே இல்லை :

தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திட்டகளோ ஒன்றுமே இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.