மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது தமிழக அரசியல் களம் குறித்து ஒரு முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன், சட்டப்பேரவையில் பேசும் போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஐயப்பனின் பேச்சு குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், திமுகவின் 5 ஆண்டு கால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருகிற வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில், ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பதும், வலுவான ஒரு கூட்டணி அமையாததும் திமுகவிற்குச் சாதகமாக அமையும். கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி கொடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பொறுத்து இருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.