முதல் ஆப்பரேஷன் (சிறுகதை)

Su.tha Arivalagan
Oct 18, 2025,03:52 PM IST

- எம்.கே.திருப்பதி, திருப்பூர்


தன்வந்திரி ஹாஸ்பிடலின்  "கார்டியோ தோராசிக்  சர்ஜெரி "    யூனிட்,  சென்னை டிராபிக்கை விட பரபரப்பாக காணப்பட்டது!


டாக்டர் பாலச்சந்தர் உட்சபட்ச டென்ஷனில் காணப்பட்டார்!  அவருக்கு இது முதல் ஆபரேஷன். அதுவும் மிகவும் சிக்கலானது.  இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும்,  "coronary arteries " ல் பெரும் சிக்கல். நெஞ்சு  கூட்டை பிளந்து, பைபாஸ்  சர்ஜெரி செய்ய வேண்டும்.


இதய ஓட்டத்தை நிறுத்தி தான் ஆப்ரேஷன் செய்ய வேண்டும். இதயமும் நுரையீரலும் செய்ய வேண்டிய வேலைகளை 'ஹார்ட் லங்க் ' மிஷின் பார்த்துக் கொள்ளும்! கிட்டத்தட்ட 8 லிருந்து 10 மணி நேரம் வரை அறுவை சிகிச்சை நடக்கும்.


சாலை பழுதடைந்தால் மாற்று வழி ஏற்பாடு செய்வதை போல... அடைப்பு ஏற்பட்ட அந்தப் பக்கமும் இந்த பக்கமும் புதிய ரத்தக் குழாயை இணைக்க வேண்டும். அதை காலின் தொடை பகுதி அல்லது அதற்கு கீழ் பகுதியில் இருந்து ரத்தக்குழாய்  வெட்டி எடுக்க வேண்டும்!


ரிஸ்க்கான காரியம் தான். சக்சஸ் ரேட் பாதிதான். கரணம் தப்பினால் மரணம். ஆகவே பாலச்சந்தர் அதிக படபடப்புடன் காணப்பட்டார். "அனஸ்தீசியாலசிஸ்ட்க்கு தலைவலின்னு சொன்னிங்க.. அவர் ரெடி ஆயிட்டாரா?"




" இல்ல சார் அவர் நாட் அவைலபிள். பட் MMM ஹாஸ்பிடல்ல இருந்து எக்ஸ்பர்ட் ராம் மோகன் வராரு சார்.. "


" ஜெனரேட்டர் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அல்ல? "


" நோ சார்.. சார் நம்ம கிட்ட ரெண்டு ஜெனரேட்டர் இருக்கு சார்.. "


" பிளட் அரேஞ்மென்ட் அப்புறம்  சர்ஜெரி இன்ஸ்ருமெண்ட்ஸ் எல்லாம் ரெடியா? "


" எவ்ரி ஒன் ரெடி சார்... சார் இது எல்லாமே பண்டமெண்டல் தான். உங்களுக்கு நாங்க சொல்ல வேண்டியதில்லை.. "


" உங்களுக்கான நேரத்துக்காக நாங்க காத்துகிட்டு இருக்கோம்.. "


" தேங்க்யூ டாக்டர்ஸ்... நீங்கதான் எனக்கு பெரும் உதவியா இருக்கணும் "


டாக்டர் பாலச்சந்தர் சொல்லிக்கொண்டே ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார்! கார்டியோ தோராசிக் சர்ஜரி சீப் டாக்டர் கிரிதரன்...  தன் சேரில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி முக்கால் வட்டமாய், அவரின் கொலீக்ஸ்  சூழ்ந்திருந்தனர்!


" டாக்டர்... பாலச்சந்தர் நமக்கு ரொம்ப முக்கியம்... நாம எல்லாரும் நம்ம பங்களிப்பை 100 பெர்ஸன்ட் கொடுக்கணும் "


" ஓகே சார் "  என்று எல்லோரும் கும்பலாய் சொல்ல...


CTS டிபார்ட்மெண்ட் துணைத் தலைவர் டாக்டர் ராஜகோபாலன் குறுக்கிட்டு  சொன்னார். 


" டாக்டர் பாலச்சந்தர் சார், இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான ஹார்ட் ஆபரேஷன் பண்ணி இருக்காரு. பட்... அவருக்கு ஆபரேஷன் அப்படின்னு சொன்னதும் ரொம்ப நெர்வஸ் ஆகிறார்..."


 "அதுதானே ஹியூமன் நேச்சர்.."  என்றார் சீப் கிரிதர்!


 ஆபரேஷன் தியேட்டர்.  அந்தக் ஏர் கண்டிஷன் குளிரிலும் வியர்த்துப் போயிருந்த டாக்டர் பாலச்சந்தர்... பயத்துடன் கண்களை மூடிக்கொண்டு கடவுளை பிரார்த்தித்துக் கொண்டார்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)