டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!

Su.tha Arivalagan
May 28, 2026,09:16 AM IST

டாக்கா:  வங்கதேசத்தில் பக்ரீத் குர்பானிக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு எருமை மாடு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வங்காளதேசத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்த மஞ்சள் நிற முடிகளைக் கொண்ட ஒரு அரிய வகை எருமை மாடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்காக இந்த எருமை மாடு விற்கப்பட்டிருந்தது. சுமார் 700 கிலோ எடையுள்ள இந்த மாட்டைப் பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்களும், சமூக வலைத்தளப் பிரியர்களும் பண்ணைக்குத் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




பொதுமக்களின் இந்த அதீத ஆர்வம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, வங்காளதேச அரசு கடைசி நேரத்தில் தலையிட்டு இந்த எருமை மாட்டைப் பலியிடுவதில் இருந்து காப்பாற்றியுள்ளது. வங்கதேச உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமதுவின் உத்தரவின்படி, மாட்டை வாங்கியவருக்குப் பணம் திருப்பித் தரப்பட்டு, அந்த விலங்கு டாக்காவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.


அங்கு இந்த அரிய வகை எருமை மாட்டிற்கு எனத் தனி இருப்பிடமும், அதனைக் கவனித்துக் கொள்ள ஒரு தனிப் பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் இதனைப் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கு வசதியாக இரண்டு வாரக் கண்காணிப்புக் காலத்திற்குப் பிறகு இது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.