கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

Su.tha Arivalagan
Oct 18, 2025,06:27 PM IST

சென்னை : தொண்டர்கள் யாரும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் வந்து விசாரணையை துவக்கி உள்ளது. 


கரூர் சம்பவம் விவகாரத்தில் அதிமுக, பாஜக மட்டுமே இது அரசின் அலட்சியத்தாலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தராததுமே காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் இது தவெக.,வும் அக்கட்சியின் தலைவரும் தான் முழுக்க முழுக்க காரணம் என மற்ற அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரிலும் கரூர் விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.




சமீபத்தில் கட்சி தலைவர் விஜய்யை, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சந்தித்து, கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று என்.ஆனந்த் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், தொண்டர்கள் யாரும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தவெக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.