ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
சென்னை : தமிழக சட்டசபையில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக எம்எல்ஏ.,வும் ஆன உதயநிதி ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை விஜய் தலைமையிலான அரசை மிக கடுமையாக விமர்சித்தார். வெளிப்படையாக அவர் முன் வைத்த கருத்துக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்றது. இதில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக சட்டசபை துவங்கியதும், நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து உரையாற்றினர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆரம்பம் முதல் இறுதி வரை தவெக அரசை மிக கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் நிராகரித்த கட்சி தவெக :
உதயநிதி தனது உரையில், " தமிழக சட்டசபை தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கலாம். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை நீங்கள் பெறவில்லை. தமிழக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளிக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் உங்களுக்கு எதிராக பதிவான ஓட்டுக்களே அதிகம். 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
65 சதவீதம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி தவெக. தவெக.,விற்கு 108 இடங்கள் தான் கிடைத்துள்ளது. அதுவும் அக்கட்சியின் தலைவர் தனது வெற்றியின் மீது நம்பிக்கை இல்லாமல் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, அதில் இப்போது ஒன்றை ராஜினாமாவும் செய்துள்ளார். அந்த தொகுதி மக்களை நேரடியாக சந்தித்தோ அல்லது அறிக்கை மூலமாகவோ கூட இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை.
நேற்று சென்னை ஐகோர்ட் அளித்த உத்தரவுப்படி திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என கூறி உள்ளது. இதனால் தவெக.,விற்கு 106 பலமே உள்ளது. ஆனால் தேர்தலில் தனக்கு எதிராக திமுக அமைத்த கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்த்துக் கொண்டு பெரும்பான்மை கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து இந்த ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கு ஆதரவு அளித்த விசிக, கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கு சொல்லி உள்ள காரணம், ஜனாதிபதி ஆட்சி அமைந்து விடக் கூடாது என்பது தான். அதே சமயம் இப்போதும் திமுக கூட்டணியில் தான் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையை இழந்துட்டீங்க :
உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான கூட்டணியில் இருக்கக் கூடிய அமமுக கட்சி எம்எல்ஏ.,விடம் அந்த கட்சி தலைவருக்கு தெரியாமல் ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாக பிளவுபட்டிருக்கும் அதிமுக.,வின் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தருவதாக சொல்லி உள்ளார்கள்.
புதுமையான ஆட்சின்னு சொன்னீங்க. ஆனால் இன்று புஷ்பா பட பாணியில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்து விட்டு மக்கள் கேட்கிறார்கள், change change என்று சொன்னீர்கள். இதற்கு பின்னால் exchange இருக்குமோ என்கிறார்கள். இது போன்ற வித்தியாசமான செயல்பாடுகளால் நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு முன்பே இந்த அரசு நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. மக்களும் நம்பிக்கை இழக்க துவக்கி விட்டனர். எத்தனை நாட்கள் இந்த அரசு நீடிக்க போகிறது என தெரியவில்லை.
ரியல் ஆட்சி நடத்துங்க :
தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்னீர்கள். அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளீர்கள். உங்களை என்ன சக்தி என்று சொல்வது? சாத்தியம் இல்லாத பல வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள். அதில் சிலவற்றையாவது நிறைவேற்ற பாருங்கள்.
ரீல்ஸ்ல மட்டும் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க. திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை முடக்காமல் தொடர்ந்து செயல்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் சோஷியல் மீடியாவில் உங்களை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் தலைவர் கூறியதை போல் உங்கள் அரசு தொடர நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். அதனால் நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.