மறக்கக் கூடாத நம்மாழ்வார்.. இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்!
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது யாருக்கு என்று தெரியுமா?
ஒரு இந்திய பசுமைப் போராளி, வேளாண் விஞ்ஞானி, சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை வேளாண்மை நிபுணர் என அழைக்கப்பட்டவர் கோ. நம்மாழ்வார்.
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி பார்புரட்டியார் மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது.
இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தார்.
நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களைத் தவிர்த்து, மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், கரைசல் உரம், எரு, இயற்கை இலைகள் மற்றும் தழைச்சத்து உரங்கள் (பசுந்தாள் உரம்) போன்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வலியுறுத்தினார், இவை மண்ணின் வளத்தைப் பெருக்கி, ஆரோக்கியமான மகசூலைத் தரும், மேலும் மண் மற்றும் நீரை மாசுபடுத்தாது என நம்மாழ்வார் கூறினார்.
பூச்சி கொல்லிகள், மீத்தேன் வாயு திட்டம், இந்தியா மரபணு சோதனைகள், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி, வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல் போன்ற திட்டத்தை எதிர்த்து போராடினார்.
1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காகவும்,
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம் செய்வதற்காகவும்,
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகவும்,
2002 - இயற்கை உழவாண்மைக்காக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.
நம்மாழ்வார் விருது என்பது தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஒரு கௌரவமாகும். இதில் முதல் பரிசு ₹2.5 லட்சம், இரண்டாம் பரிசு ₹1.5 லட்சம், மூன்றாம் பரிசு ₹1 லட்சம் ரொக்கப் பணத்துடன், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது இயற்கை வேளாண்மையைப் பரப்புபவர்களுக்கும், சக விவசாயிகளுக்கு வழிகாட்டுபவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. நம்மாழ்வார், 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
நம்மாழ்வாரின் நினைவு நாளில் நாம் அனைவரும் பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்துவோம், இயற்கை வேளாண்மையை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.