'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

Su.tha Arivalagan
Nov 03, 2025,05:36 PM IST

- ஜெய்சக்தி பாலாஜி


No means NO.. இது அஜீத் பட வசனம்.. ஆனால் இது நிஜத்திலும் மிக மிக அர்த்தப்பூர்வமானது, எல்லோருக்கும் பொருத்தமானதும் கூட. இது வாழ்க்கையில் மிக முக்கியமாக நாம் கைக்கொள்ள வேண்டிய விஷயமும் கூட.


பொதுவாகவே நாம் அனைத்து இடங்களிலும் NO சொல்லலாம். உதாரணமாக ஒரு இடத்திற்கு போக பிடிக்கவில்லை எனில் NO சொல்லலாம். ஒருவரிடத்தில் பேச விருப்பமில்லை எனில் NO சொல்லலாம். அப்படிச் சொல்வதனால், மற்றவர் மனம் வருத்தப்படும் என நினைத்தால் உண்மையில் நம் மனம்தான் வருத்தப்படும். நோ சொல்லத் தயங்கி தேவையில்லாமல் எஸ் சொல்லி சங்கடத்துக்குள்ளானவர்களுக்குத்தான் அந்த வலி புரியும்.


No என்பது ஒரு சக்தி வாய்ந்த வார்த்தையாகும். The Art of saying NO என்னும் புத்தகம் உள்ளது. ஒருவரை அவர் விரும்பாத விஷயத்திற்கு சம்மதிக்க வைத்தால் அதன் முடிவு சரியாக இருக்காது. நமது நேரம், எனர்ஜி, மனநலம், அமைதி இவை அனைத்தும் நாம் விரும்பாத செயலை செய்யும்போது பாதிக்கும். ஒரு விஷயத்திற்கு நாம் கட்டாயத்தின் பேரில் okay சொன்னால் பல பிரச்சினைகள் வரும். முடியாது என்று கூறினால் மனம் வருத்தப்படும். நம்மை தவறாக நினைப்பார்கள் என நினைத்தால் எதிர்காலத்தில் நமக்கு பல பிரச்சனைகள் வரலாம். NO என்பது அடாவடியான வார்த்தை கிடையாது. அழகான மறுதலிப்பு அது. அதில் தவறும் இல்லை.




உதாரணமாக ஒரு நண்பர் நம்மிடம் நாளை எனக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால் நாளை நமக்கு முக்கியமான மீட்டிங் இருந்திருக்கும். அதனை விட்டு வர முடியாது. என்ன சொல்வீர்கள்? No சொன்னால் தப்பாக நினைப்பார். ஆனாலும் yes சொல்ல முடியாது. எப்படி no சொல்வது?


முதலில் உங்கள் நிலையை தெளிவாக எடுத்துக் கூறுங்கள். பின் அதற்கு மாற்று வழி இருக்குமானால் அதையும் எடுத்துக் கூறுங்கள். குழப்பமான மனநிலையில் சரி எனக் கூறுவதை விட சிறிது நேரம் no சொல்லலாம். அதனால் உறவுகளுக்குள் விரிசல் வராமல் இருக்கும். No சொல்வது நமது உரிமை. உங்களுக்கு நீங்கள் முதலில் முக்கியத்துவம் கொடுத்து பழகுங்கள்.