உருவத்தைப் பார்த்து எடை போடக் கூடாது!

Su.tha Arivalagan
Dec 25, 2025,03:17 PM IST

- ந. தீபலட்சுமி


அன்று ,சென்னைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் மதியம் மணி 2:30 இருக்கும்.  பசி வயிற்றை கிள்ளியது.

 

என்ன! அப்பா எந்த ஹோட்டலிலும் வண்டியை நிறுத்தவில்லையே என என் மகன் என்னைப் பார்க்க, காலையில் சாப்பிடாமல் விரதம் இருக்கும் இவர் மதியம் இவ்வளவு நேரம் ஆகியும் சாப்பிட எந்த ஓட்டல் பக்கமும் திருப்பவில்லையே என நான் என் மகனைப் பார்க்க, நாங்கள் இருவரும் சேர்ந்து என் கணவரைப் பார்க்க, அவரோ வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தார்.


திடீரென "நிறுத்துங்க" என்று அவர் சொன்னவுடன் டிரைவர் அப்படியே வண்டியின்  வேகத்தைக் குறைத்து நிறுத்தினார். எங்கு இருக்கிறோம் என திரும்பிப் பார்க்கும் பொழுது தான் தெரிந்தது வாலாஜாபாத் வந்து விட்டோம் என!


ஒரகடம் கடந்ததும் காஞ்சிபுரம் செல்லும் வழியில் இருக்கிறது இந்த "கேசவ பவன்" உணவகம்.




நல்ல பசி! 


என்ன செய்வது, மணி இரண்டை கடந்துவிட்டது. உணவகத்தின் வெளித்தோற்றம் கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இங்கு உணவின் தரம் எப்படி இருக்குமோ? என்ற பயம் வேறு! ஆனாலும் என் கணவரின் பார்வை என் எண்ண ஓட்டத்தை அடக்கியது.


நுழைந்தோம் உள்ளே, எங்கள் வசதிக்கேற்ப இடத்தை தேடிப் பிடித்து அமர்ந்தோம்.


உழைப்பின் தன்மையை உணர்த்தும் வகையில் இருந்த ஒரு கை, வாழை இலைகளை பரிமாற ,கையின் சொந்தக்காரர் யார் என நிமிர்ந்து பார்த்த நான் சற்று ஆடித் தான் போனேன்.


சற்றே தளர்ந்த நிலையில் இருந்த உருவம், ஆனால் அந்த முகத்தில் என்ன ஒரு சாந்தம்! 

என்ன ஒரு அமைதி!

என்ன ஒரு கரிசனம்!

கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எத்தனை முறை கேட்டாலும் பரிமாறிய விதம்!

இதுதான் அன்னை போன்ற உபசரிப்போ!


அவருடன் KV uniform போட்ட தேனி போன்று சுறுசுறுப்பாக இருந்த அவரும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அயராமல் இயங்கிய விதம் ,Wow! They are incredible! என எண்ணத் தோன்றியது!


"Don't judge a book by it's cover"


என்பதை இந்த உணவகம் எனக்கு உணர்த்தியது. அவ்வளவு அருமையான , ருசியான உணவு! வயிறும் மனமும் நிறைந்து வெளியே வந்தோம்.


"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்"


வெளியே வரும் பொழுது,"நீங்கள் சாப்பிட்டீர்களா?" எனக் கேட்டவுடன்  இருவரும் அழகாக சிரித்துக் கொண்டே சொன்னார்கள், "இனிமேல் தான்".


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)