மக்கள் பணத்தில் பொது இடங்களில் சிலை வைக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திருநெல்வேலி மாவட்டத்தில் நிறுவ தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பொது நிதியை பயன்படுத்தி தலைவர்களின் புகழை பரப்புவதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பொது இடங்களில் அரசு சார்பில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், உங்கள் முன்னாள் தலைவர்களை புகழ பொது நிதியை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், நுழைவு வாயில் கட்டுமானத்திற்கு எந்த தடையும் இல்லை என்றும், அதற்காக ஏற்கனவே ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே, அந்த கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிமன்றம் இந்த விஷயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
முன்னதாக இந்த சிலை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது. தலைவர்கள் பெயரில் பூங்கா அமைப்பது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், அவர்கள் தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை அறிந்து கொள்ள முடியும். தலைவர்கள் பூங்கா அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுக்காமல், பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் பிற காரணங்களால், இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
பொது இடங்களில் சிலைகள் நிறுவ எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசு அவ்வாறு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், கருணாநிதி சிலை நிறுவ தமிழக அரசு எடுத்த முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.