2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
Aug 23, 2025,11:34 AM IST
மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை. அவர்கள் 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. ஆனால் அதிலிருந்தும் அவர்கள் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் இவர்களின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ராஜீவ் சுக்லா. இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள்? ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். அவர்கள் இன்னும் விளையாடும்போது, இப்போது ஏன் பிரியாவிடை பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் ஏன் இப்போதே கவலைப்படுகிறீர்கள்?.
பிசிசிஐ யாரையும் ஓய்வு பெறக் கூறாது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விஷயத்திலும் இதுவே நடக்கும். அவர்கள் சொந்தமாகவே முடிவை எடுக்க வேண்டும். விராட் கோலி இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார். ரோஹித் சர்மா நன்றாக விளையாடி வருகிறார். எனவே அவர்களின் பிரியாவிடை பற்றி இப்போதே நினைக்க வேண்டாம் என்றா் அவர்.