சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சென்னை: திரைப்படங்களைத் தணிக்கை செய்யும் போது தணிக்கைக் குழுவினர் (Censor Board) அவற்றை வெறும் கலைப் படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடாது என்றும் கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கவிஞர் வைரமுத்து, திரைப்படம் கருத்துக்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிப்பது படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும். இது தரமான படங்கள் உருவாவதைத் தடுக்கும். ஒரு கலைஞனின் கற்பனை மற்றும் சமூகத்தின் பிரதிபலிப்பு மற்றும் அதில் சொல்லப்படும் கருத்துக்களைத் தணிக்கைக் குழுவினர் அரசியல் கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கக் கூடாது. திரைப்படங்களில் அறம் சார்ந்த விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அரசியல் காரணங்களுக்காகக் காட்சிகளை வெட்டுவது ஆரோக்கியமானதல்ல.
திருவள்ளுவர் பிறந்த நாளான இன்று மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்ட தமிழ்நாட்டு அரசுக்கு என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிறக்கும் நாளெல்லாம் திருவள்ளுவர் திருநாளாக இருந்தால் நன்றாக இருக்கும். இந்தியாவின் தேசிய இனங்களின் தாய் மொழிகள் எல்லாம் மதிக்கப்பட வேண்டும். தமிழ் மட்டும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் தாய் மொழியை நாங்கள் பேணுவது மாதிரியே இந்தியாவின் எல்லா தேசிய இனங்களும், தாய் மொழியை பேண வேண்டும், மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
சாகித்ய அகாடமியின் தன்னாட்சி உரிமை பறிக்கப்படுவதாக இந்தியாவின் எல்லா மொழிகளும் கருதுகின்றன. இது படைப்பாளிகளுக்கு, அவர்களின் படைப்புச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்று அறிவுலகம் கருதுகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பும் படியும் கேள்வி எழுப்பும்படியும் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ் புத்தாண்டு திணிக்கப்பட்டதல்ல. 60 ஆண்டுகள் முன்பு பாவேந்தர் பாரதிதாசன், மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என குறித்துக் கொடுத்ததை பின்பற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.