10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

Su.tha Arivalagan
Aug 08, 2026,03:22 PM IST

"டேய்... கடைக்கு போய் ஒரு கட்டு கறிவேப்பிலை வாங்கிட்டு வாடா!" அப்படின்னு அம்மா குரல் கொடுத்த காலம் எல்லாம் மலை ஏறிடுச்சுங்க. இப்போல்லாம் அண்டை வீட்டுக்காரர் வீட்டுக்குப் போய் "கொஞ்சம் கடுகு இருந்தா தர்றீங்களா?"ன்னு கேக்குறத விட, போனை அன்லாக் பண்ணி 10 நிமிட டெலிவரி ஆப்ல ஆர்டர் போடுறதுதான் 'நவீன நாகரிகம்' ஆகிப்போச்சு!


நம்ம சோம்பேறித்தனத்துக்கு இந்த ஆப் காரங்க அழகா தீனி போடுறாங்க... நாமளும் அதை செமையா என்ஜாய் பண்றோம்!


முன்னாடிலாம் தெரு முனையில இருக்குற அண்ணாச்சி கடைக்கு நடந்தே போய் சாமான் வாங்கிட்டு வருவோம். கொஞ்சம் தூரமா இருந்தா கொஞ்சம் கூட யோசிக்காம சைக்கிளை எடுத்துட்டுப் போய் வாங்கிட்டு வருவோம் (இப்பெல்லாம் மக்கள் வாக்கிங் போகத்தான் சைக்கிளையே யூஸ் பண்றாங்க!) 


இப்போ? வீட்டு வாசல்லதான் கடை இருக்கும், தெருவுலதான் காய் வண்டி நிக்கும். ஆனா நாம மட்டும் கட்டில்ல கிடந்து, கையை மட்டும் நீட்டி ஆப்ல ஆர்டர் தட்டுவோம்.


பத்து ரூபாய் சாமானுக்காக 25 ரூபாய் செலவு செய்யும் புத்திசாலி இனமாக இன்றைய மனிதர்கள் மாறி விட்டார்கள். 

ஐநூறு மீட்டர் நடந்து போனா அந்த 25 ரூபாய் மிச்சமாகுமேடா? ன்னு மனசாட்சி லைட்டா தட்டிக்கேட்கும். ஆனா, "அட யாருய்யா அவ்வளவு தூரம் நடந்து போறது ?ன்னு மனசாட்சியை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு ஆர்டர் கன்பர்ம் குடுத்துடுவோம்!


இங்கதான் நம்ம ஆட்களோட 'ஓவர் ஸ்மார்ட்' தனம் வெளிப்படும். ஆப்ல 'ஆர்டர் பிளேஸ்டு' (Order Placed) அப்படின்னு வந்த அடுத்த செகண்டே, நாம வாட்சை பார்க்க ஆரம்பிச்சுடுவோம்.




1-வது நிமிடம்- "அடடா, பாய் வண்டிய எடுத்துட்டாப்ல!"

2-வது நிமிடம் - "என்னடா இது... மேப்ல வண்டி ஒரே இடத்துல நிற்குது? சிக்னலா இருக்குமோ?"

3-வது நிமிடம் - கதவை திறந்து வெளிய வந்து, தெரு முனையைப் பார்த்துக்கிட்டே நிற்போம்!


"10 நிமிஷம்னு தானே சொல்லி இருக்கான்... எதுக்குடா 3-வது நிமிஷத்துலயே கதவைத் திறந்து வெயிட் பண்றீங்க?"ன்னு கேட்டா, "இல்லப்பா, அவன் 9-வது நிமிஷத்துல வந்துட்டா என்ன பண்றது?"ன்னு ஒரு லாஜிக்கை பேசுவோம் பாருங்க... அங்க நிக்குது நம்ம பதற்றம்!


சரி, ஆப்ல ஆர்டர் போடுறதுதான் சோம்பேறித்தனம்னா, அதுல பண்ற 'ஷாப்பிங் லூட்டி' இருக்கே...


வெறும் ஒரு பாக்கெட் பால் வாங்க உள்ள போவோம். ஆனா, ரூ. 199-க்கு மேல வாங்கினா டெலிவரி ஃப்ரீ!ன்னு ஒரு மெசேஜ் வரும். உடனே நாம என்ன பண்ணுவோம்? ரூ. 30 பால் பாக்கெட்டோட சேர்த்து, வேண்டாத 3 பாக்கெட் சிப்ஸ், 2 சாக்லேட், ஒரு ஜூஸ் பாட்டில்னு கண்டதையும் ஆட் பண்ணி பில்லை ரூ. 250 ஆக்கிடுவோம்.


கடைசியில ஃப்ரீ டெலிவரி வாங்குற சந்தோஷத்துல, வீணாப்போன ரூ. 220-ஐ மறந்துடுவோம். இதுக்கு பேருதான் 'ஸ்மார்ட் ஷாப்பிங்'!


"தொழில்நுட்பம் வளருதுடா சாமி..." ன்னு சந்தோஷப்படுறதா, இல்லை "ஒரு தீப்பெட்டி வாங்கக்கூட எந்திரிக்க வக்கத்துப் போன சோம்பேறி ஜென்மமா மாறிட்டோமே" ன்னு வருத்தப்படுறதானே தெரியல!


சரி சரி நீங்க படிச்சுட்டு இருங்க.. இன்னைக்கு நைட்டு தோசைக்கு சட்னி அரைக்க கொத்தமல்லி இல்லை. இருங்க, மொபைலை எடுத்து ஒரே ஒரு கிளிக் பண்ணிட்டு வர்றேன்!