தங்கம் விலை வீழ்ச்சி... வாங்குவோருக்கு மகிழ்ச்சி; அடகு வைப்போருக்கு அதிர்ச்சி!
- முனைவர் தி. தங்கலட்சுமி
தங்கம் என்பது பலரின் மனதிலும் ஆசையையும் பற்றையும் தூண்டும் ஒரு மதிப்புமிக்க உலோகம். கஷ்டப்பட்டு உழைத்து, சிறுகச் சிறுகச் சேமித்து ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று அடித்தட்டு மக்கள் ஓயாது உழைக்கின்றனர்.
அப்படிக் கடினப்பட்டுத் தங்க நகை வாங்குவது வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல; எதிர்பாராத சூழலோ, அவசரத் தேவையோ வரும்போது உடனடியாக வங்கியிலோ அல்லது அடகுக் கடையிலோ வைத்துப் பணம் திரட்ட உதவும் ஒரு கையிருப்பாகவே அதைக் கருதுகின்றனர். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரை, தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், தங்கத்தின் விலை குறையும்போது அடகு வைப்பவர்களுக்குப் புதிய கடன்களில் குறைந்த தொகையே கிடைக்கும் நிலை ஏற்படலாம். ஏற்கனவே அடமானம் வைத்த நகைகளைத் திருப்ப முடியாத நிலைக்கு வருமான நெருக்கடியும், வட்டிச் சுமையுமே முக்கியக் காரணமாகின்றன.
தங்க நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம், வரி எனப் பல செலவுகள் சேர்வதால் ஆரம்பத் தொகை அதிகமாக இருக்கும். ஆனால், அதை விற்கச் செல்லும்போது செய்கூலி, சேதாரம் ஆகியவை திரும்பக் கிடைப்பதில்லை; மேலும், கல் பதித்த நகைகளில் கற்களின் மதிப்பு முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் போகலாம். இதனால், வாங்கிய விலையைவிடக் குறைவான தொகையே கைக்குக் கிடைக்கும் யதார்த்தம் உள்ளது.
திருமணம், விசேஷங்கள் போன்றவற்றைத் திட்டமிட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கத்தின் விலை வீழ்ச்சி சற்று ஆறுதலைத் தரலாம். அதேநேரம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் சேர்ந்து இருப்பதால், ஒட்டுமொத்தக் குடும்பச் செலவு குறித்த கவலை அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், தங்கத்தின் விலை வீழ்ச்சி வாங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தாலும், ஏற்கனவே வாங்கியதை விற்கவோ அல்லது அடகு மூலம் கூடுதல் பணம் திரட்டவோ நினைப்பவர்களுக்குச் சவாலாகவே உள்ளது. எதிர்காலத்திற்காகத் தங்கத்தில் சேமிக்க நினைப்போருக்கும் இது ஒருவிதத் தயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).