தமிழ்நாட்டில் இருந்து மது, போதையை ஒழிக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

Meenakshi
Apr 16, 2025,12:35 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மது, போதைப்பொருள்களின் விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


பாமக கட்சி சார்பில் முழுநிலவு மாநாடு வரும் மே 11ம் தேதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,


சமூக நீதியை நிலைநாட்டவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும்,  69 சதவீத இட ஒதுக்கீட்டை நிலை நாட்டவும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படுகிறது. வன்னியர் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இன மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சிறப்பு செயல் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.




 மாநாட்டில் முக்கிய நோக்கமே தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில் வெற்றிகரமாக நடத்த உள்ளோம். அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், மதுவை ஒழிக்க வேண்டும். ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது. சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டில் மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.