தமிழக அரசு உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒருபுறம் பச்சைப்பயறு சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்று உழவர்களுக்கு அறிவுரை கூறும் தமிழக அரசு, இன்னொருபுறம் விளைவித்த பச்சைப்பயிறை கொள்முதல் செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று நான் பயணம் மேற்கொண்ட போது என்னை சந்தித்த உழவர்கள், பச்சைப்பயறு கொள்முதல் தொடர்பான தங்களின் குறைகளை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 378 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு சில நாட்களில் அது கொள்முதல் செய்யப்பட்டு விட்டதால் அதன் பின் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 டன், நாகை மாவட்டத்தில் 100 டன் மட்டுமே பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் எந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் நாபெட் நிறுவனத்துடன் இணைந்து தான் தமிழக அரசின் வேளாண் துறை பச்சைப்பயறு மற்றும் உளுந்து பயிரை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், மிகக்குறைவாக 1440 டன் பச்சைப்பயறை மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்வதால் பெரும்பான்மையான உழவர்கள் தாங்கள் விளைவித்த பச்சைப்பயறை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். அரசின் மூலம் ஒரு கிலோ பச்சைப்பயறு ரூ.86.82க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் கொள்முதல் செய்யப்படாத நிலையில், தனியாரிடம் கிலோ ரூ.45 முதல் ரூ.50க்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மிக அதிக அளவில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒரு விழுக்காடு அளவுக்கு மட்டுமே அரசு கொள்முதல் செய்வது தான், பெரும்பாலான மாவட்டங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததற்கு காரணம் ஆகும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு சுமார் 600 கிலோ வீதம் ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதில் 1440 டன் அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்வது எந்த வகையில் நியாயம்? அதேபோல், ஒரு ஏக்கருக்கு 240 கிலோ விளைச்சல் கிடைக்கும் நிலையில், அதில் 155 கிலோவை மட்டும் கொள்முதல் செய்வது எப்படி நியாயமாகும்?
தமிழ்நாட்டில் கடந்த 2021-22ஆம் ஆண்டில் 4250 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது; 2022-23ஆம் ஆண்டில் இது 12,605 டன்களாக அதிகரித்தது. ஆனால், கடந்த ஆண்டில் 1,860 டன்களாகவும், நடப்பாண்டில் 1440 டன்களாகவும் குறைக்கப்பட்டு விட்டதை ஏற்க முடியாது. இது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது மத்திய அரசின் திட்டம் என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. தமிழகத்திலிருந்து பச்சைப்பயறை அதிக அளவில் கொள்முதல் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு சாதித்திருக்க வேண்டும்.
தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.