ஹைட்ரோ கார்பன் திட்டம்.. திமுகவின் துரோகங்களை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்: டாக்டர் அன்புமணி

Meenakshi
Aug 25, 2025,05:49 PM IST

சென்னை: தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே  துரோகம் செய்து வருகிறது. அப்பட்டமாக துரோகம் செய்து, ஊடகங்களின் உதவியுடன்  அதை மறைக்கும் முயற்சிகள் இனியும் வெற்றி பெறாது.   இந்த விவகாரத்தில் திமுக  செய்த துரோகங்களை மன்னிக்கவே மாட்டார்கள் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன்  கிணறுகளை  அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்த  தமிழக அரசு, அதற்கு உழவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத்  தொடர்ந்து அதன் முடிவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணியில் திமுக அரசின் மக்கள் நலனை விட, இரட்டை வேடமும், சந்தர்ப்பவாதமும் தான் நிறைந்திருக்கிறது.


ஹைட்ரோ கார்பன்  கிணறுகளை  அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அரசியல் கட்சிகள், உழவர்கள் அமைப்புகள்  உள்ளிட்டவற்றிடமிருந்து கண்டனங்கள் குவிந்தன. இந்த விவகாரத்தில் திமுக அரசின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் அம்பலப்படுத்தியது. தமது துரோகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதை  உணர்ந்த திமுக அரசு, இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து தான் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.




ஹைட்ரோ கார்பன்  கிணறுகளை  அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தான். இந்த அமைப்பு  தமிழக அரசின் கீழ் செயல்படும் அமைப்பாகும். ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க  அந்த அமைப்பு தன்னிச்சையாக அனுமதி கொடுத்து விட்டதைப் போலவும்,  அது குறித்த செய்தி தமக்கு தெரிந்தவுடன் உடனடியாக அதைத்  தடுத்து நிறுத்தி விட்டதைப் போலவும் திமுக அரசு நாடகமாடுகிறது. இது அப்பட்டமான பொய். மாநில அரசு  வகுத்துத் தரும் கொள்கையின்படி தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முடிவெடுக்க முடியும். ஆணையத்தின் முடிவின் பின்னணியில் இருப்பது திமுக அரசு தான்.


மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திணிப்பது, அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தால் உடனடியாக திரும்பப் பெறுவது என்ற உத்தியைத் தான்  திமுக அரசு கடைபிடித்து வருகிறது. 2010-ஆம் ஆண்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை  காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதித்த  திமுக அரசு,  அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன்  ஆய்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக பல்டி அடித்தது. காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பது, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்கஸ்டன் சுரங்கம் அமைப்பது ஆகியவற்றிலும்   திமுக அரசு  இதே நாடகங்களைத் தான் அரங்கேற்றியது.


தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே  துரோகம் செய்து வருகிறது. அப்பட்டமாக துரோகம் செய்து, ஊடகங்களின் உதவியுடன்  அதை மறைக்கும் முயற்சிகள் இனியும் வெற்றி பெறாது.   இந்த விவகாரத்தில் திமுக  செய்த துரோகங்களை மன்னிக்கத் தயாராக இல்லாத தமிழ்நாட்டு மக்கள், வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்கு தயாராகி காத்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.