ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
சென்னை: நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக மூட ஆணையிட வேண்டும்! என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.
என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்ததன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வானதிராயபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட 62 மடங்கும், பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அதிக அளவாக 115 மடங்கும் கூடுதலாக பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அந்த ஏரியில் உள்ள நீரிலும் பாதரசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம், கடந்த 2023-ஆம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்திருந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதும் உறுதியாகியிருந்தது. அவை இப்போது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களால் கடலூர் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி தான் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் ஸ்டெர்லை ஆலை ஏற்படுத்திய தீங்குகளை விட பலமடங்கு அதிக கேட்டை என்எல்சி ஏற்படுத்தியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பது தான் எனது வினாவாகும்.
தனியார் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் என்.எல்.சியால் பெரும் தீமைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் நம்பிக்கை இல்லை என்றால், சென்னை ஐஐடி மூலம் கூட தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்திக் கொள்ளலாம். அந்த ஆய்விலும் என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.