ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!
- முனைவர் கோ.லதா
சிலுவை மரத்தில் உயிர் துறந்தாரே
சிந்தை கலங்கி சீஷர்கள் நின்றாரே
அடக்க மானார் கல்லறைத் தொட்டியில்
ஆழ்ந்த மவுனம் உலகெங்கும் அப்பொழுது
மூன்றாம் நாளில் அதிசயம் நடந்ததே
மூடிய கல்லைத் தேவதூதர் உருட்டினாரே
கல்லறை வெறுமையாய் காட்சி யளித்ததே
கர்த்தர் உயிர்த்தார் எனசெய்தி வந்ததே
மரணமே உன்கூர் எங்கே என்றாரே
பாதாளமே உன்வெற்றி எங்கே என்றாரே
பாவ இருளை ஒழித்து வந்தாரே
பாரினில் புதுஒளி ஏற்றி வைத்தாரே
அன்பின் உருவாய் மீண்டும் வந்தாரே
அனைவருக்கும் அமைதி தந்து சென்றாரே
நம்பிக்கை நாதரை போற்றுவோம் நாமே
நற்செய்தி அன்புடன் கூறுவோம் நாமே
அல்லேலூயா பாடி மகிழ்வோம் வாருங்கள்
அவர் அன்பில் என்றும் நிலைத்திருங்கள்
உயிர்த்தெழுந்த இயேசுவின் அருள் பெற
உயர்ந்த எண்ணத்துடன் செயல் படுங்கள்
ஈஸ்டர் தின மகிழ்ச்சி பொங்கட்டும்
இல்லங்கள் தோறும் அன்பு வளரட்டும்
மரணத்தை வென்றவர் மகிமை வாழ்க!!
மண்ணுலகில் அமைதி நிலைத் திருக்க!!
உயிர்த்தெழுந்த உன்னதர்
சிலுவை சுமந்த சீர்மிகு நாதன்
சிந்தை குளிர வந்தான் பரன்
கல்லறை வாசல் திறந்தது இன்று
கவலை யாவும் மறைந்தது அன்று
மரணப் பிடியில் சிக்கா வேந்தன்
மானிட பாவம் போக்கிய தேவன்
அன்பின் ஒளியை ஏற்றி வைத்தான்
அகிலம் போற்ற மீண்டும் வந்தான்
துயரம் நீக்கும் தூயவன் இயேசு
துதிப்போம் அவரைத் தொழுது பேசு
சாவு பயத்தை வென்றார் அவரே
சத்திய வாழ்வைத் தந்தார் இவரே
விண்ணக வேந்தன் மண்ணகம் வந்தான்
விடியல் தந்து வெற்றி கொண்டான்
நம்பிக்கை நதியை ஓடச் செய்தான்
நலமே விளையப் பாதை தையான்
அல்லே லூயா கீதம் இசைப்போம்
அன்பைப் பாரங்கும் எடுத்து உரைப்போம்
உயிர்த்தார் அவரே உலகின் மீட்பர்
உயர்ந்த வழியைக் காட்டும் சுடார்
இருளை ஒழித்த இனிய ஒளி
இன்பம் சேர்க்கும் ஈஸ்டர் வழி
மாண்பு மிகுதி மகிமைக்கு உண்டு!
மகிமை பாடி மகிழ்வோம் இன்று!!
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)