ஆயிரம் பாடல் பாடி, அமுதம் போல் தந்தவளே!

Su.tha Arivalagan
Jul 12, 2026,12:23 PM IST

- முனைவர் கோ. லதா


தென்னகத்தின் குயிலே வா, தேனிசையை பொழிய வா  

திரைஉலகின் தெய்வமே, திருநாமம் பாட வா  

ஆயிரம் பாடல் பாடி, அமுதம் போல் தந்தவளே  

அமரும் வியக்கும் குரல், அன்னை போல் தாலாட்டும்  


கேரள மண் பிறந்தவளே, கலையின் மொழி அறிந்தவளே  

கர்நாடகம் பயின்றவளே, காதல் ராகம் பாடியவளே  

இளையராஜா இசையிலே, இன்னிசை மழை பொழிந்தாய்  

இளமை தந்த குரலிலே, இதயம் உருக வைத்தாய்  


எம்.எஸ்.வி ஈர்பிலே, ஏழு ஸ்வரம் ஆடியதே  

எண்பதுகள் நாயகியே, ஏங்கும் நெஞ்சை தாலாட்டினாய்  

கவிஞர் வரிகள் உயிர்பெற, கந்தர்வம் நீ பாடினாய்  

காலம் கடந்தும் நிற்கும், காவியம் நீ ஆனாய்  




மலையாளம், தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி பாடி  

மனிதர்கள் நா எல்லாம், மயக்கும் தேன் சிந்தினாய்  

நான்கு மொழி தேசிய விருது, நாடே போற்றும் பெருமை  

நாற்பதாயிரம் பாடல், நாவில் தெய்வம் வாழ்கிறது  


"மலர்களே மலர்களே" என்று மனம் உருக பாடினாய்  

"மச்சானை பார்தீங்களா" என்று மயில் போல் ஆடினாய்  

"பூ மலர்ந்திடும்" பாட்டிலே, பூமியே சிரித்ததே  

"ஒரு தெய்வம் தந்த" பாட்டில், உள்ளம் கரைந்ததே  


காதல் வந்தால் குயிலானாய், கண்ணீர் வந்தால் யாழானாய்  

கொண்டாட்டம் வந்தால் தாளமானாய், கோவில் மணி ஓசையானாய்  

துள்ளல் பாட்டும் உனக்கு சொந்தம், தாலாட்டும் உனக்கு சொந்தம்  

துயரம் துடைக்கும் பாட்டும், தெய்வம் தந்த வரமானதே  


ராகம் பிறந்த வாயிலே, ரீங்காரம் நீ செய்தாய்  

ரசிகர் கோடி நெஞ்சிலே, ராணியாய் நீ வீற்றிருந்தாய்  

பத்ம பூஷண் விருது தந்து, பாரதம் உன்னை போற்றுதே  

பாடும் கலை தெய்வமே, பாடலில் நீ வாழ்கிறாய்  


குரலில் மட்டும் இனிமையில்லை, குணத்திலும் தங்கமானாய்  

குடும்ப பெண்ணாய் வாழ்ந்து, குலமகள் பெயர் காத்தாய்  

சினிமா உலகம் சொல்லும், "ஜானகி அம்மா" என்றே  

சிஷ்யர்கள் கோடி சொல்லும், "குருவே நீயே" என்றே  


மைக் முன்னே நின்றாலே, மலர்கள் மழை பொழியும்  

மேடை ஏறி பாடினால், மெய் சிலிர்து போகும்  

வயது எண்பதை தாண்டியும், வளமை குறையாத குரல்  

வானம் வரை புகழ் பரவி, வையகம் போற்றும் பெயர்  


ஒரு பாட்டில் நூறு உணர்வு, ஒரு வரியில் ஆயிரம் பொருள்  

ஒவ்வொரு சுரமும் முத்து, ஒவ்வொரு சொல்லும் வைரம்  

தலைமுறை மாறினாலும், தாலாட்டு மறக்காது  

தமிழ் இருக்கும் வரைக்கும், தாயே உன் பெயர் நிற்கும்  


இசைக்கு நீ அரசியானாய், இதயத்திற்கு ராணியானாய்  

இல்லம் தோறும் ஒலிக்கிறது, இனிய குரல் உன்னுடையது  

வாழ்துகிறோம் தாயே உன்னை, வணங்குகிறோம் கலையை  

வரம் தந்த தெய்வமே, வாழிய பல்லாண்டு  


பாடல் என்றால் ஜானகி, பாவம் என்றால் ஜானகி  

பாசம் என்றால் ஜானகி, பரவசம் என்றால் ஜானகி  

தென்றல் போல் வந்தவளே, தெய்வ குரல் தந்தவளே  

தென்னிசைக்கு பெருமை சேர்த, தேவகான பாடகியே  


காலம் உள்ளவரை உன் பாட்டு, காற்றில் மிதந்து வரும்  

கலையின் தாயே ஜானகி, காலத்தை வென்று வாழ்வாய்  


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)