இதயம் என்னும் கவிதை...!

Su.tha Arivalagan
Apr 27, 2026,05:03 PM IST

- முனைவர் கோ. லதா


உள்ளக் கமலத் துள்ளலே ஊறும் உணர்வாலே

கள்ளம் இல்லாக் காதலைக் கவிதை யாக்கிடவே 

வெள்ளை ஏட்டில் மெல்லவே விரல்கள் எழுதுதே

அள்ளித் தந்து அன்பினை அகம் மகிழுதே!


துள்ளி வரும் துயரத்தைத் தூரம் தள்ளிடவே

அள்ளி வரும் ஆசையை அணைத்து நின்றிடவே

தெள்ளு தமிழ்த் தேனினைத் தெளிவாய்ப் பெய்திடவே 

உள்ளம் உருகுதே உண்மைக் கவிதை தந்துமே!




நினைவில் நின்ற நிழலினை நேச மாகவே 

கனவில் கண்ட காட்சியை கவிதை யாக்கவே

பனை போல் உயர்ந்த பாசமே பண்பைத் தருமே

மனமே எழுதும் மங்கா மழலைக் கவிதையே


--


கலைநயம் காக்கக் காப்புரிமை விதி


மூளை உழைப்பை முதலாய் மதிப்போம்

முளைக்கும் சிந்தனை முத்தாய்ப் பதிப்போம்

ஏப்ரல் இருபத்தாறு அறிவுரிமைத் திருநாள் 

பாரில் படைப்பாளிக்கு கௌரவத் திருநாள்!


கற்பனை ஊற்றில் கவிதை நதி

கலைநயம் காக்கக் காப்புரிமை விதி

எத்தன் ஒருவன் திருடாமல் காப்போம்

சொத்தென  எண்ணி சட்டத்தை ஏற்போம்!


புத்தாக்க சிந்தனை புவியின் விடியல் 

புதுமை கண்டுபிடிப்பு வெற்றியின் அடையல். 

காப்புரிமை சட்டக் கவசம் அணிவோம்

கலைஞர் உழைப்பைக் கண்ணெனப் பேணுவோம்!


வணிகச் சின்னம் வணிகத்தின் முத்திரை

வளர்ந்து நிமிர்ந்திட அதற்கொரு நித்திரை

போலிப் புயலைத் துணிவுடன் எதிர்ப்போம்

புவிசார் குறியீட்டில் ஊரைப் புகழ்ப்போம்!


சிந்தனைத் திருட்டைத் தீயெனக் கருது

சிகரம் தொடவே உரிமையை எழுது

அறிவுச்சொத்தே அழியாத வைரம்

அகிலம் வியக்கும் உன்னத சிகரம்!


சமூகம் வளரப் புதுமை செய்வோம்

சட்டத் துணையால் சரித்திரம் நெய்வோம்

உரிமைக் குரலால் உலகை வெல்வோம்

அறிவுச்சுடரால் இருளை வெல்வோம் !


--



தமிழுக்கும் அமுதென்று பேர்...




தமிழுக்கும் அமுதென்று பெயராகும் - இன்பத்

தனித்தமிழே உயிருக்கு நேராகும்!

அமிழ்தினும் இனியதென் தமிழாகும் - அது

அகிலமும் போற்றும் ஒளியாகும்!


நிலவென்று தமிழுக்கு பேராகும் -  எமது

நீள் சமூகத்திற்கு வளைவாகும்!

மலரென மணக்கும் தமிழாகும் - நல்ல

மகிழ்ச்சி தரும் முத்தேன் நதியாகும்!


மணமென்று தமிழுக்குப் பேராகும் -  எங்கள்

வாழ்விற்கே ஊன்றிய ஊராகும்!

குணமெனும் குன்றே தமிழாகும் - 

அது குறையிலா அறத்தின் சீராகும்!


பால்போன்ற தூய்மைத் தமிழாகும் - 

நல்ல பண்புள்ள புலவர்க்கு வேலாகும்!

வான்போல உயர்ந்த தமிழாகும் - 

எங்கள் வலிமைக்குத் தூணாய் நிற்குமாம்!


--


பெண்ணின் பெருமை புகன்றே பாடினான்!


தமிழுக்கு அமுதெனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவன்!

தன்னிகர் இல்லாப் புரட்சிக்கவி ஆனவன்!

இமிழ்கடல் உலகில் இன்பத்தமிழ் ஓங்கவே

இணையற்ற பாடல்கள் இனிமையாய் ஈந்தவன்!


பெண்ணின் பெருமை புகன்றே பாடினான்!

மண்ணின் உரிமை முழங்கியே ஆடினான்!

கண்ணின் மணிபோல் கருதிய தமிழினை

விண்ணின் உயர்வுக்கு வியப்புறச் சேர்த்தவன்!


வாழ்கவே பாவேந்தர் வண்டமிழின் செல்வன்!

சூழ்கவே அவர்தம் தூயநற் புகழே!


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)