கலாச்சார பன்முகத்தன்மை தினம் & சர்வதேச தேயிலை நாள் சிறப்பு கதை

Su.tha Arivalagan
May 21, 2026,04:15 PM IST

- முனைவர் கோ. லதா


கலாச்சார பன்முகத்தன்மை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதேபோல தேயிலை நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எழுதப்பட்ட ஒரு குட்டிக் கதை.


சண்டை


ராமுவும் ஐஷாவும் பள்ளி வேலிக்கு அருகில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். "உன் பண்டிகை தான் பெரியது" என்று ராமு கத்தினான். "இல்லை, என் பாடல் தான் அழகு" என்று ஐஷா முறைத்தாள். இருவருக்கும் இடையே கோபத்தின் சுவர் எழுந்தது.


தாத்தாவின் தேநீர்


 


அருகிலிருந்த நீலகிரி தேயிலைக்கடை தாத்தா இருவரையும் பார்து சிரித்தார். சூடான இரண்டு கோப்பை தேநீரை நீட்டினார். "சண்டை போடுவதை விட, ஒன்றாக அமர்ந்து குடியுங்கள் பிள்ளைகளே" என்றார்.


பகிர்வு


தேநீரின் மணம் அவர்களின் கோபத்தை ஆற்றியது. ஒரே பெஞ்சில் அமர்ந்து குடித்தபடி பேசினார்கள். ராமு தன் பொங்கல் பண்டிகையும், ஐஷா தன் பாடல்களையும் சொன்னார்கள். பின்னணியில் கோலம், பறை, பல்வேறு கொடிகள் - அனைத்து கலாச்சாரமும் ஒன்றாக இருந்தது.


பாலம்


இறுதியில் இருவரும் கைகுலுக்கினார்கள். தேயிலை இலைகள் பாலமாக மாறின. மேலே எழுதியிருந்தது: "கலாச்சாரமே அமைதிக்கான பாலம் - May 21"


வேறுபாடுகள் நம்மை பிரிக்காது. புரிதலையும் பகிர்தலையும் போல், ஒரு கோப்பை தேநீர் கூட இரு உள்ளங்களை இணைக்கும் 


இந்த மே 21-ல் நாமும் வேறுபாட்டை மதித்து நட்பை வளர்போம்.


--


முன்னேற்றம் அறிந்திடு...

 

முன்னேற்றம் வேண்டில் முயற்சி கொள்வாய்

தன்னம்பிக்கை தன்னில் தழைக்க விடுவாய்

இன்னல்கள் வந்தாலும் இடராது நில்வாய்

நன்மை நடக்கும் நாளும் வருமே


தோல்வி என்பது தொடக்கம் என்றே

வேள்வி போலே விடாமுயற்சி செய்வாய்

ஆளும் அறிவால் அகிலம் வெல்வாய்

நாளும் உழைப்பால் நலம்பெறு வாயே


கல்வி ஒளியாய் கருத்தில் ஏற்றி

செல்வம் தேடிடும் சீரிய வழியில்

பொல்லாப்பு நீக்கிப் பொறுமை கொண்டு 

நல்லார் துணையால் நடைபோடு வாய்


விண்ணை முட்டும் வேட்கை கொள்வாய்

மண்ணில் புகழும் மாண்பு பெறுவாய்

எண்ணம் உயர்ந்தால் இலக்கு எட்டும் 

முன்னேற்றம் உன்னை முன்னின்று காக்கும்


--


மீன் போல் நீந்தப் பழகு

 

நீரின் ஆழம்கண்டு நிலையழியேல் நெஞ்சே

மீனின் வலிமை கொண்டு முயல்வாயே

அலைகள் அடித்தாலும் அஞ்சாதே நீ

மீன் போல் நீந்தப் பழகுவீரே 


தடைகள் வந்தாலும் தளராதே மனமே

கடலின் போக்கினில் கற்றுக்கொள் வழியே

வலையில் சிக்கினும் வாழ்வை நினைத்தே 

மீன்போல் நீந்தப் பழகு நேரே


சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் எழுந்து 

ஆழியின் நீரிலே அஞ்சாது செல்வாய்

விழுந்தால் எழுந்து விடாமுயற்சி கொள்வாய்

மீன்போல் நீந்தப் பழகு வாழ்வாய்


வெற்றியோ தோல்வியோ விதியின் கைப்பொருள்

நீந்தியேப் பார்த்திடு நெஞ்சம் தளராதே

இலக்கை எட்டிட இடரை வென்றிடு

மீன்போல் நீந்தப்பழகு வாழ்வில் நிலையே