சத்திய நாயகன் மக்களின் மகாத்மா!

Su.tha Arivalagan
Oct 02, 2026,05:49 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை


மண்ணில் பிறப்பெடுத்தாய் மனிதம் காத்தாய்

மக்களின் மனங்களில் மகாத்மாவானாய்


கையில் ஆயுதம் ஏந்தாமல் நின்றாய்

வாய்மையில் நின்று களத்தை வென்றாய்


சத்தியம் பேசினாய் சாவையும் தாங்கினாய்

தர்மத்தின் வழியே தனித்து விடப்பட்டாய்




உப்பு சத்தியாகிரகத்தில் உரிமையை விதைத்தாய்

உலகமே வியக்க உண்மையை விளம்பினாய்


ஏழையின் கண்ணீரை நெஞ்சில் சுமந்தாய்

எளிய வாழ்க்கையை வாழ்ந்தும் காட்டினாய்


சத்தியம் பேசினாய் சாவையும் தாங்கினாய்

தர்மத்தின் வழியில் தனித்துவிடப்பட்டாய்


பாரத நாடே உன்னை வணங்கிட ஏங்கி நிற்கும்

பாவங்கள் நீங்கிட உன் பாதங்கள் தேடி நிற்கும்


அன்பை விதைக்க நீ அருளோடு திரும்பி வா

அமைதி காக்க அருத்தொண்டாற்ற திரும்ப வா


சத்தியத்தை கரங்களில் ஏந்தி நீ வந்திடு

சமத்துவ பாதை மனங்களில் மலர்ந்திட நீ வந்திடு


மனிதநேயம் சிறக்க வந்திடு அண்ணல் மகாத்மாவே

மக்கள் மனங்களை நிறைக்க வந்திடு அண்ணல் மகாத்மாவே


வாழ்க பாரதம் வளர்க தமிழ்


(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)