Dr N Badhri's Drama Review: தொடுவான மனிதர்கள்

Su.tha Arivalagan
Nov 03, 2026,02:18 PM IST

- முனைவர் என்.பத்ரி


பெண்ணுக்கு நம்பிக்கைத் தரும் மாலியின் ஓர் அற்புதக் காவியம்!!


கலைமாமணி மாலி அவர்களின், ’தொடுவான மனிதர்கள் ’ என்னும் நாடகத்தை சமீபத்தில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அவருடைய அழைப்பின் பேரில் பார்க்கும் அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த நாடகத்தை எழுதிய திருமதி இந்துமதி அவர்களும், எழுத்தாளர் கல்கி ரமணன் அவர்களும் இன்னும் பல எழுத்தாளர்களும் இந்த நாடகத்தை பார்க்க அன்று வந்திருந்தனர் என்பது கூடுதல் சிறப்பு.


நாடகத்தின் கதாநாயகன் ஒரு தொழில் அதிபர். கதாநாயகி ராதிகாவை அவன் விரும்புகிறான். அதற்கு முன்னரே ராதிகாவை அவனுடைய  நண்பனும் விரும்புகிறார். இந்தத் தகவல் தெரிந்த உடனே கதாநாயகன் அடக்கி வாசிக்கிறார். 




இதற்கிடையில் ராதிகாவின் காதலன் துரதிஷ்டவசமாக ஒரு சாலை விபத்தில் இறந்து விடுகிறான். பின்னர் அந்தப் பெண்ணின் வாழ்வில் என்ன நடக்கிறது? என்பதுதான் கதை. முழுக் கதையை நான் சொல்லக் கூடாது. நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


’மிகவும் விறுவிறுப்பான ஒரு சமூகக் கதை ஒன்றை நாடக வடிவில் இவ்வளவு சிறப்பாக கொடுப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் அற்புதமாகவும்,மிகவும் நேர்த்தியாகவும் அளித்துள்ளீர்கள்’ என்று கல்கி இரமணன் அவர்கள் நாடகத்தை பார்த்து விட்டு உடனே திரு.மாலி அவர்களை  புகழ்ந்து தள்ளிவிட்டார்.


‘ஆம் அது மிகவும் உண்மை’ என்பதை கதையைப் படித்தப் பின்பு இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.


மூன்று குழந்தைகளை ஒரு கைம்பெண் பாட்டி வளர்ப்பதற்குப் படும் அன்றாட இன்னல்களை சிறப்பாக பல்வேறு காட்சிகளில் எடுத்துக்காட்டுகிறது இந்த நாடகம். ஒரு 91 வயது வாலிபரான திரு. மாலி அவர்களின் படைப்பு இது என்பதை பார்ப்பவர்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அதனால்தான் அவர்கள் விரும்பும் வசனங்கள்  வரும் நேரங்களில் எழும் கைத்தட்டுகளின் போது எல்லாம் சற்றே நாடக இயக்குனர் நிமிர்ந்து உட்காருகிறார். அருகில் அமர்ந்திருந்த என்னால் அவர் முகத்தில் மகிழ்ச்சியின் பரவசத்தைக் காணமுடிந்தது.


அனைத்து நாடக நடிகர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் திரைப்பட நடிகர் ரமேஷ் அரவிந்த் அவர்களை நினைவுபடுத்துகிறார். அவருக்கென்று ஒரு மேனரிசம் தெரிகிறது. கதாநாயகி ராதிகா தன்னுடைய காதலன், மற்றும்  தன்னுடைய கைம்பெண் பாட்டியின் ஆதரவுடன் வாழ்க்கையை கடத்துகிறார். இதனை நாடக இயக்குனர் மிக அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளார்.


எதிர்பாராத திருப்பங்கள் பலவற்றை இயக்குனர் அங்கங்கே வழங்கி ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். சிறப்பான நாடகப் பின்னணிக் காட்சிகளும், ஒலி, ஒளி  அமைப்புகளும்  நாடகத்தை சலிப்பில்லாமல் கொண்டு செல்கின்றன.


அனைத்து பெண்களும் வாழ்க்கையில் நம்பிக்கை பெற்று வாழ வேண்டும் என்பதைக் கருவாகக் கொண்ட கதை இது. வசனங்கள் நறுக்கு தெரித்தாற்  போல் இருக்கின்றன. ’மற்றவர்களுக்கு உதவத்தானே இந்த வாழ்க்கை’  'நீயே ட்ரை பண்ணு, உன்னால முடியலன்னா, எங்கிட்ட வா’ என்று வசனம் பேசும் கதாநாயகன் கதாநாயகியை சிந்திக்க வைக்கிறான். செயல்பட வைக்கிறான் என்பதே உண்மை. இவ்வாறான அற்புதமான வரிகள் வரும் போது அரங்கில் எழுந்த கரவொலிகள் அடங்க நீண்ட நேரமாயின.  


இந்த வயதில் சமூகத்தின் மீது இவ்வளவு அக்கறைக் கொண்டு அருமை நண்பர் மாலி அவர்கள் நாடகத்தை  இயக்கி இருப்பதையும் அதை ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்த்து ரசிப்பதும் ஒரு அற்புதமான கலைஞனின் அடையாளம் என்றே சொல்லாம். ஒரு சவாலான செயலை சாதாரணமாக்கியுள்ளது அவருடைய நாடக உலகின் அனுபவம்.


இதற்கு முன்னால் அவரின், ’கண்ணன் பிறந்தான்’ என்ற நாடகத்தைப் பார்த்தேன். அதிலும் அவருடைய சமூக அக்கறை காணப்பட்டது.  ஆனால், கூடவே வசனங்களில் கொஞ்சம் குசும்புத்தனமும் இருந்தது. ஆனால், இந்த நாடகத்தில்  நகைச்சுவை என்பது எள்ளளவுக்கு கூட இல்லை. நாடகத்தை பார்க்கும் பொழுதே பார்ப்பவர்  மனது வலிக்கின்றது. அவ்வளவு அற்புதமான வசனங்களும், கலைஞர்களின் நடிப்புகளும் நம் நெஞ்சை விட்டு நீங்காத இடம் பெறுகின்றன. 


நாடக கதாநாயகனும் அவருக்கு நண்பராக நடித்த கலைஞரும் பாட்டியும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். கதாநாயகியும்தான். மெல்லிய இசை பின்னணி அவர்களின் உணர்வுக்கு  உரம் சேர்க்கிறது.


இருப்பினும் கதாநாயகன் தன்னுடைய சட்டையை அணிந்து வரும் பொழுது பட்டன்களை சரியாக போட்டுக் கொண்டு வரவில்லை. ஒருவேளை காதலியை பார்க்க வரும் பரபரப்பில் அப்படி வந்து விட்டாரோ? என்று எண்ணமும் தோன்றுகிறது. கதாநாயகியின் தம்பியின்  கால் முறிந்து விட்ட நிலையில் அவனுடைய முகத்தில் காணப்படும் சிரிப்பு சூழ்நிலைக்கு பொருந்தவில்லை. தன்னை அறியாமல் சிரித்து விடுகிறான். அதை பார்க்கும் நமக்கும் சிரிப்பு வருகிறது. காட்சிப் பின்னணிகளை மிக மிக விரைவாக மாற்றி தங்கள் திறமைகளை மேடைக் கலைஞர்கள் காட்டியுள்ளார்கள்.




நாஞ்சில் ரேவதி ராதிகா என்னும்  கதாநாயாகியாகவும், கோமு பாட்டியாக மாலா அவர்களும், பிரபு இராமச்சந்திரன் இராம் குமாராகவும், கணேஷ் கார்த்திக்காகவும் முக்கியப் பாத்திரங்களில் நடித்து கலக்கியுள்ளனர். பாரதி, சாய் ஸ்மிருதி, பிரகுல ரமேஷ், வி.ஜி.ராமஸ்வாமி, நாகராஜ ராவ், டெல்லி சுகுமார், ஆனந்த சீனுவாசன், வசந்த குமார், ஆகியோர் தமக்குக் கொடுத்த பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளார்கள்.


மொத்தத்தில் நாடகத்தை பார்க்கும் நமக்கு  மனம் வலித்தாலும் மானுடத்துக்காக கவலைப்படும் கலைஞன் மாலி  என்று அவர் பெருமிதம் கொள்ளலாம்.அவர்கள் நம் அனைவரின் அன்புக்கும், பாராட்டுக்கும் உரியவர். அவருக்கு கலைமாமணி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல விருதுகளும் அவரை சென்றடைய மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். இவர்கள் வாழும் தெய்வங்கள் மட்டுமல்ல, மற்றவர்களை  வாழ வைக்கும் நடமாடும் தெய்வங்கள் என்றே என்னால் சொல்ல முடிகிறது.


இப்படிப்பட்ட நாடகங்களை அவர் தொடர்ந்து இயக்க வேண்டும். இந்த சமூகம் பெண்களைப் பற்றிய தமது பார்வையை திருத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தை திரு.மாலி அவர்களின் நாடகங்கள் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்பதுதான் என் ஆழ்ந்த நம்பிக்கை.


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)