Short Story: மாயமான மாண்புமிகு!

Su.tha Arivalagan
Sep 25, 2026,10:08 AM IST

- முனைவர் என். பத்ரி


அன்று ஞாயிற்றுக் கிழமைக்காலை. சின்னசாமி தன் நண்பன் குப்புசாமியின் பையனுடன் அந்த நகரத்துக்கு வெளியே இருந்த அந்த பெரிய பங்களாவை நோக்கி நடந்து கொண்டு இருந்தான். அது ஒரு  மாநில அமைச்சரின் நேர்முக உதவியாளரின் வீடு என்று சொல்லிக் கொள்கிறார்கள். 


மாதத்தில் கடைசி ஞாயிற்றுக் கிழமை மட்டும்தான் அவரின் தரிசனம் கிடைக்கும்.மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில் வேறு ஊரில் கலெக்ஷனோ?. சின்னசாமிக்குத் தெரியவில்லை. சின்னசாமி சில பேருக்கு அவரிடம் சொல்லி வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.


குப்புசாமியின் பையன் ஒரு பொறியியல் பட்டதாரி. அவனுக்கு சென்னையில் ஒரு கவர்மெண்ட் ஜாப் வாங்கித் தருவதாக இந்த பிரமுகர் உறுதி அளித்திருந்தார். அதை நம்பி அட்வான்ஸாக 5 லட்சம்  பெருந்தொகையை  அவரிடம் கொடுத்திருந்தார் சின்னசாமி.


இந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்டர் கொடுத்துவிட்டு மீதி 5 லட்சத்தை வாங்கிக் கொள்வதாக அந்த ’மாண்புமிகு’  சொல்லியிருந்தார். அதற்காகத்தான் மனசு பூரா மத்தாப்புடன் இருவரும் மகிழ்ச்சியாக அந்த பங்களாவை நோக்கி நடந்துக் கொண்டு இருந்தார்கள். குப்புசாமியின் கையில் ஒரு மஞ்சப்பை.அதில் என்ன  இருக்கும் என்பது உங்களுக்கும் இப்போது தெரியும்தானே?




அவருடைடைய  வீட்டுக்கு அருகில் வழக்கமான கூட்டத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.வீட்டுப் பூட்டை உடைத்துப் பார்த்த பொதுமக்கள்,’ஆள் எஸ்கேப்’ என்று சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்கள்.


அதற்குள் அந்த பங்களாவின் சொந்தக்காரர் தகவல் அறிந்து காவல் துறையுடன் அங்கு வந்து சேர்ந்தார். காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும்,வேலைக்காக பணம் கொடுத்தவர்களிடம் கையில் தயாராக வைத்திருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்தார்கள். பிரமுகரிடம் வேலைக்காக பணம் கொடுத்த விவரங்களை ஒரு மனுவாக எழுதச்சொன்னார். பிறரைப் போல சின்னசாமியும் எழுதிக் கொடுத்தான். ஒரு வழியாக காக்கிசட்டைக்காரகள் கோபமாக இருந்த கூட்டத்தை சமாதானப்படுத்தினார்கள்.


வழியில் இருந்த செக்யூரிட்டி,’ இந்த இடம்  அவரது சொந்த இடம் இல்லை. வீட்டிற்குப் போய் தொலைக்காட்சியைப் பாருங்கள். யாரிடமும் தான் எந்தப் பணமும் வாங்கவில்லை. இது எதிர்கட்சிகள் செய்யும் சதி’ என்று ’மாயமான மாண்புமிகு’ சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இப்போதுதான் என் பெண்சாதி ஃபோன் பண்ணி விவரத்தைச் சொன்னாள்.’என்று சொல்லி முடித்தான். 


நல்லவேளை இது சின்னசாமியின் நண்பன் குப்புசாமியின் காதில் விழவில்லை. அவனிடம், ’நாம் இருவரும் சென்னை அலுவலகத்தில் நாளைக்காலை அவரைப் போய் பார்க்கலாம்’என்று சொல்லி சின்னசாமியை சமாளித்தான். வீட்டுக்கு வந்து ’மாண்புமிகு’ வுக்கு வழக்கம் போல் ஃபோன் பண்ணினான் சின்னசாமி. 


’ஸ்விட்ச்சுடு ஆஃஃப்’என்ற பதில் வந்தது. அவர் செய்வது துரோகம் என்பது புரிந்தது. தொலைக்காட்சியில் அப்பாவியாய் பேசிக் கொண்டிருந்த அவரை மனம் வந்தவாறு திட்டித் தீர்த்தான் சின்னசாமி.


சின்னசாமியும் தன் ஃபோனை,’ ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணிணான். தனிக்கட்டையான அவன் தன் உடமைகளை ஒரு பையில் திணித்துக் கொண்டு  அடுத்த நாள் விடியற்காலை முதல் பேருந்தில் அந்த ஊரை விட்டு முழுவதுமாகப் புறப்பட்டான்.அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. வாழ்க்கையில் குறுக்குவழி ஆபத்தானது என்பதை புரிந்துக் கொண்டான். 


பேருந்து நிலையத் தொலைக்காட்சியில்,’ ஊழலை நாட்டில் ஒழிக்க வேண்டும்’ என்று ‘மாண்புமிகு பேசிக் கொண்டிருந்தார். சின்னசாமியின் கண்கள் சினத்தால் சிவந்து போயின.


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)