எங்கே என் வண்டி சாவி?

Su.tha Arivalagan
Oct 11, 2026,12:10 PM IST

- முனைவர் என். பத்ரி


கண்ணனுக்கு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது. வீட்டிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  அலுவலகத்திற்கு இன்னும் பத்து நிமிடத்தில் செல்ல வேண்டும். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.


அவன் எப்பொழுதுமே தன்னுடைய பொருள்களை எல்லாம் தயாராக தன்னுடைய படுக்கையின் மேல் எடுத்து வைத்து விட்டுத்தான் குளிக்கவேச் செல்வான். இன்றும் அப்படித்தான் தன்னுடைய உடை, பேனா, பர்ஸ் எல்லாவற்றையும் தயாராக தனது கட்டிலின் மேல் எடுத்து வைத்தான். அவற்றுடன் எடுத்து வைப்பதற்கு தன்னுடைய இரண்டுச் சக்கர வண்டிச் சாவியை அதனுடைய வழக்கமான இடத்தில் பார்த்தான். ஆனால், அதைக் காணவில்லை. அதிர்ந்துதான் போனான். 


அபார்ட்மெண்ட்டின்  பொது கார் பார்க்கிங்கில் வண்டி இருப்பதைப் பார்த்து ’வண்டி தொலையவில்லை’என்பதை   உறுதிப்படுத்திக் கொண்டான். சமாதானம் அடைந்தான். இருந்தாலும் அதன் சாவி யார் கையிலாவது கிடைத்து விட்டால் என்னசெய்வது? கூடுதலாக அதன் சக்கரத்தில் ஒரு பூட்டு போட முடிவு செய்தான்.


தன் மனைவி லதாவிடம் சொல்லித் தேட சொன்னான். அவளும் வீடு முழுக்க தேடி விட்டாள். ஏறத்தாழ வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் வெளியே வந்து இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.




”எப்பொழுது கடைசியாக வண்டியை எடுத்தேன்?”என்று யோசித்துப் பார்த்தான். நேற்று ஞாயிற்றுக் கிழமை. நேற்றுக் காலைத்தான் வண்டியில் அவனும்,லதாவும் கோவிலுக்கு  போய் விட்டு வந்தார்கள். அதற்குப் பிறகு ஓய்வுதான் எடுத்தார்கள். வெளியில் எங்கும் போகவில்லை.


காணாமல் போன வண்டி சாவியால் வீட்டில் கடும் சண்டை. கோபக்கார கண்ணன் கண்டபடி  லதாவை திட்டித் தீர்த்து விட்ட்டான்.பொன்னு வீட்டுக்கு புதுசு. விசும்பிக் கொண்டே படுக்கப் போய் விட்டாள்.


இதற்கிடையில் அவனுடைய அலுவலகச் சீருடையான வெள்ளை நிற பேண்ட்டையும் காணவில்லை. அதை அணிந்து கொண்டுதான் அவன் அலுவலகம் செல்ல  வேண்டும். அந்த வெள்ளை நிற பேண்டை நேற்று தான் லாண்டரிக்கு கொடுத்திருந்தான்.


இப்போது லாண்டரிக் கடை திறந்து இருக்கும். லாண்டரிக் கடை முதலாளி இவன் நண்பன்தான். கைப்பேசியில் தொடர்புக் கொண்டு துணிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கச் சொன்னான்.


லாண்டரிப் பையன் துணிகளுடன் வந்தான். பணத்தோடு போக இருந்தவன் திரும்பி வந்தான். கையில் இருந்த அவனுடைய இருசக்கர வண்டியின் சாவியை கண்ணனிடம் கொடுத்தான்.


’பேண்ட் பேக்கட்டில் இருந்ததாம். இனிமேல் துணியை கொடுக்கும்போது வீட்டுச் சாவியையும் சேர்த்து போடுங்க’.கூடுதலாக ஒரு குசும்புச்செய்தியைச் சொல்லி விட்டுப் புறப்பட்டான்.


சாவியை வாங்கிக் கொண்ட கண்ணன் லதாவைப் பார்த்தான்.’தோய்க்காத பேண்ட்டை ஏன் லாண்டரிக்கு அனுப்பினாய்?’ அடுத்து ஒரு சண்டை ஆரம்பமானது. அவள்,’’பேண்டை லாண்டரிக்கு அனுப்பியது நீங்கள்தான். பேண்ட் வாஷிங் மெஷின் மேல் இருந்தால் அதை தோய்ப்பத்துதான் என் வேலை’’ என்றாள்..


கணவன் கண்ணன் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.


அலுவலகத்துக்கு  தொலைபேசியில் பேசி ஒரு மணிநேரம் தாமதமாக வருவதாகச் சொன்னான்.வீட்டில்  நிசப்தம் நிலவியது.புது மனைவியை ஒரு வழியாக  சமாதானம் செய்ய முயற்சித்தான் .ஓரளவு வெற்றியும் பெற்றான். இப்படியே ஒரு மணி நேரமாகி விட்டது.


அப்போதுதான் அவனை அலுவலகத்திற்கு  அவசரமாக அழைத்தது கைப்பேசி அழைப்பு.லதா அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள்.அடுத்த சில வினாடிகளில் முகத்தை துடைத்துக் கொண்டு முதலில் வெளியில் வந்தாள். அவள் முகம் வெட்கத்தில் சிவந்து இருந்து.


வெள்ளைப்பேண்டில் வெளியே வந்த கண்ணனின் முகமெல்லாம் மத்தாப்பு. மனைவிக்கு, ’டாடா’ காட்டியவாறே அலுவலகத்துக்கு புறப்பட்டான் கண்ணன்.


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)