பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்

Hamridha
Oct 02, 2025,05:06 PM IST

தைலாபுரம்: பாமக இளைஞர் அணித் தலைவராக, கெளரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கேஎம் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்க்குமரன் நியமனத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்தார்.


தமிழ்க்குமரன் நியமனத்தை ராமதாஸ் அறிவித்து அதுதொடர்பான உத்தரவை அவரிடம் வழங்கினார். இதையடுத்து டாக்டர் ராமதாஸ் காலிலும், அருகே நின்ற அவரது மகள் காந்திமதி காலிலும் விழுந்து ஆசி பெற்றார் தமிழ்க்குமரன்.




டாக்டர் அன்புமணி ராமதாஸும், தமிழ்க்குமரனும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். அன்புமணி ராமதாஸ் இளைஞர் அணி தலைவராக இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டவர் தமிழ்க்குமரன். ஜி.கே.மணி முன்பு பாமக தலைவராக பதவி வகித்து வந்தார். அந்தப் பதவியிலிருந்து அவரை மாற்றி கெளரவத் தலைவராக நியமித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணியை பாமக தலைவராக அறிவித்தார். அந்த சமயத்தில், தமிழக்குமரன் இளைஞர் அணி தலைவராக அறிவிக்கப்பட்டார்.


ஆனால் நியமிக்கப்பட்ட வேகத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் தமிழ்க்குமரன். இதுகுறித்து அப்போதே சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அரசியல் பக்கமே தமிழ்க்குமரன் வரவில்லை. லைக்கா நிறுவனத்தில் இணைந்து திரைப்படத் தயாரிப்புப் பக்கம் போய் விட்டார். அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தற்போது இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அவரை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.


முன்னதாக தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் என்பவரை இளைஞர் அணி தலைவராக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். அதற்கு மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து கோபம் காட்டியிருந்தார் டாக்டர் அன்புமணி. அங்கிருந்துதான் அன்புமணிக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் இடையே மோதல் வலுத்தது என்பது நினைவிருக்கலாம்.