மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களுக்கு மதுவே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இனியாவது அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய ராமதாஸ், இந்த கோரமான கொலைக்கு மதுவே அடிப்படை காரணம் என்று தெரிவித்துள்ளார். "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்பது ஏட்டளவில் மட்டுமே இருப்பதாகத் தோன்றும் வகையில் இத்தகைய வன்முறைகள் நிகழ்வது வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தனது நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், இலவசங்களை வழங்கவும் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மது வருவாயைத் தவிர்த்து, மற்ற வழிகளில் வருமானம் ஈட்டப் பல மாற்று வழிகள் உள்ளன.மதுக்கடைகளை மூடுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரமும், சமூகப் பாதுகாப்பும் மேம்படும். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மக்களின் நலன் கருதி மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பீகார் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு, மூட்டையில் கட்டி அடையாறு ஆற்றில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சமயத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.