நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!
விழுப்புரம்: நான் உழைத்து உருவாக்கிய கட்சியை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனருக்கும், பாமக தலைவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு, பல நாட்களாகியும் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அன்புமணிக்கு அதிகாரம் கொடுத்துவிட்டு டம்மியாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான். என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் செல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை; நான் கதவை அடைக்கவுமில்லை.
அன்புமணி நிறைய பொய்களையும், கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். கட்சியினரிடம் காசு கொடுத்து என்னை பற்றி தவறாக எழுத சொல்கிறார். வேறு கட்சியினர் இருந்து வந்த வழக்கறிஞர் என்னை ராமதாஸ் என கூறி அழைத்தார். கட்சி அங்கீகாரம் இல்லாமல், சின்னம் இல்லாமல் உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி, வேட்பாளர் நியமனம் தொடர்பாக நான் தலையேற்று வழி நடத்துகிறேன் என்ற முடிவை எடுத்தேன். ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி, நான்தான் தலைவர், கூட்டணியை, வேட்பாளரை நான் தான் முடிவு செய்வேன் என கூறியது தான் பிரச்சினை.
வஞ்சனை, சூது உள்ளிட்டவற்றால் இந்த கட்சியை உறிஞ்சி எடுத்து நான் தான் கட்சி என கூற அன்புமணி துடிக்கிறார். அதனால் தான் நிறுவனர் ஆகிய நான், தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.