அன்புமணி பொதுக் கூட்டத்திற்கு ஹைகோர்ட் அனுமதி.. டாக்டர் ராமதாஸ் இன்று மேல்முறையீடு

Su.tha Arivalagan
Aug 09, 2025,10:04 AM IST

சென்னை : அன்புமணி ராமதாஸ் நடத்தும் பாமக பொதுக் கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அதை எதிர்த்து இன்று காலை மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று பொதுக்குழு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.


பாமக.,வில் கடந்த சில மாதங்களாகவே அப்பா-மகன் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி தனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என பாமக நிறுவனம் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு போட்டியாக அன்புமணியும் தனது தலைமையில் பொதுகு்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடக்கும் என்றும் அறிவித்தார். அன்புமணி நடத்தும் இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணியை தனது அறைக்கு நேரில் வரும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை அன்புமணி, நீதிபதி அறைக்கு நேரில் சென்று ஆஜரானார். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி ராமதாஸ் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரானார். இரு தரப்பினரிடமும் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு முறை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். 




தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணி நடத்தும் பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதோடு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் பொதுக்குழுவிற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். இதனால் இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்தார் அன்புமணி. கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை 11 மணிக்கு மாமல்லபரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


இந்நிலையில் இன்று காலை அன்புமணி நடத்தும் பொதுக்குழு துவங்குவதற்கு முன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் என அன்பமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.