கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
- டாக்டர் எஸ்.மணிமேகலை, ஈரோடு
விட்டு விட்டுப் பெய்கிறது ..மழை
விடாது நனைகிறாள்.மேகலை
அடர்ந்த வானம் சூழ்கிறது மேகத்தையே
ஆசையுடன் விழிகள் சுழல்கிறது மேகலைக்கே
மழையே வந்திடு ஆசையாய் அழைப்பாள்
மனதுக்குள் வருமுன் ஆவலாய் குதூகளிப்பாள்
குழந்தையா இவள் குமரி தான் மகிழட்டும்
குதூகலத்திற்கு வயது என்ன மயங்கட்டும்
மரத்தின் கிளையோரம் நனையும் சிட்டுக்குருவி
மழையின் குளிரில் நடுங்கிடும் சின்ன குருவி
சிறகடித்துப் பறக்க சிதறிய துளிகள்
சிட்டாய் பறந்தது கூட்டில் ராகங்கள்
எட்டிப் பார்த்தால் குஞ்சுகளாய் கூட்டிற்குள்
தொட்டுப் பார்த்தால் பஞ்சுகளாய் சிறகுககள்
கொய்யாப்பழம் வைக்க கொத்தி அது தின்ன
வைத்த விழியை இவள் சிமிட்ட மறக்க
காற்றில் மரக்கிளை ஆடிட ஆனந்தமே
காற்றோடு மழைத்துளி மேனி வருட பேரானந்தமே
மண்ணின் மணமோ மழையில் நாசி தாக்க
மகிழ்ச்சி பூவோ மலர்ந்து உள்ளம் பூரிக்க
கனத்த மழையில் நனைந்து கவி புனைகிறாள்
காற்றோடு கீதத்தில் கலந்து உறவாடுகிறாள்
முகத்தில் பட்டுத் தெறிக்கும் முத்து துளிகள்
இதயத்தில் தொட்டு தொடரும் முத்தான ராகங்கள்
மழையில் நனையாதே தடுக்கவே வேண்டாம்
மழையில் மனதுக்குள்ளே பூத்திடுமே பூபாளம்
விட்டு விட்டுப் பெய்கிறது ..மழை
விடாது நனைகிறாள். மேகலை
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)