வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
- முனைவர் தி. தங்கலட்சுமி
கணங்கள்தோறும் தன்னை
அணுஅணுவாய்ப் புதுப்பித்துக் கொண்டே
சுற்றிச் சுழலும் சுத்த
இயற்கையன்னை!
பொறுமையின் மறுபெயர் பூமித்தாய்!
வெளியில் புன்னகைத்துக் கொண்டே
உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்
நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
அவளின் பொறுமை எல்லை கடக்கும்போது
நிலமதிர் பூகம்பங்கள் நேரும்!
அவள் பெருமூச்சு விட்டால்,
எரிமலைக் குழம்புகள் லாவா கக்கும்!
அவள் உள்ளம் மகிழ்ந்து பூரித்தால்
வசந்தத்தில் வனமெல்லாம் பூத்துக் குலுங்கும்!
பூதம் காத்த புதையல் – மனித உடலுள் உறையும் உயிர்!
ஆம்...! ஐம்பூதம் காக்கும் புதையலே மனித உயிர்!
பூதம் காக்கும் புதையலைக்
கன்னமிட்டுக் களவாட காலதேவன் காத்திருப்பான்!
களவுபோன காலிக்கூடு காட்டில் வெந்து தணியும்!
பூமியும் பூதங்களால் காக்கப்படும் புதையலே!
கன்னமிட்டுக் களவாடித் திரியும் எமனாய் மனிதர்கள்!
யுகம் யுகமாய் புதுமை கூட்டிப் புதுமை காட்டிப்
பூமியெனப் புன்னகைத்து...
அற்பப் பொழுதே வாழவென வந்துபோகும்
வழிப்போக்கர்களாகிய வக்கிர மனிதர் செய்யும்
அட்டகாசங்களையும் அட்டூழியங்களையும்
வாய்மூடி மௌன சாட்சியாய்க் கண்டு வாழும் தாயவள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது –
புவன மாதா பொங்கி எழ நொடிகள் ஆகாது!
வையத்தின் வாய் புதைந்த மௌனத்தை வாய்ப்பாய் எண்ணி
வகையாய் மாட்டிக்கொள்ளப் போகும் மானிடா...
யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல...
அற்பமான மனிதனும் அற்புதக் கண்டுபிடிப்புகள் எனப்
பெயர் பண்ணிக்கொண்டு,
பூமியின் அடியாழம் வரைத் தோண்டித் துருவி
எண்ணிலடங்கா கனிம வளத்தைச் சுரண்டிக்கொண்டே...
புவியின் மையத்தைத் தொடத் துணிந்துவிட்டான்...!
வெந்தணலில் வெந்து போகும் விறகாக
வெகுவிரைவில் மனிதத் தவறுகளால்,
அன்பற்ற அற்பர்களின் செயலால்
பேரழிவை நாளும் நாளும் வரவேற்பதறியா மானிடரே..!
சற்றே விழித்துக்கொள்!
அன்னை பூமியை உந்தன் சுயநல எண்ணத்தால்
சுண்டச் செய்யாதே!
அவள் தந்த சுதந்திரத்தில் எல்லை மீறாதே!
உனக்கு நீயே எமனாய் மாறாதே!
ஆறடிப் பள்ளத்தில் அடங்கும்முன்
சிறு சிறு பள்ளங்களில் மரக்கன்றுகள் நட்டு,
இதுவரை அன்னை பூமிக்குச் செய்த துரோகத்திற்குப்
பிராயச்சித்தம் தேடிக்கொள்!
மரம் வளர்த்து மழை பெற்று
மண்மகளை மனம் குளிரச் செய்!
புவன மங்கையவள் மனதில்
நல்ல மனிதனெனப் பெயரெடு!
உன் சந்ததிக்குச் செழிப்பான நிலத்தை விட்டுச் செல்!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).