வான்திரை எனும் வண்ணத்திரை

Su.tha Arivalagan
Mar 12, 2026,02:33 PM IST
- முனைவர் தி. தங்கலட்சுமி

அந்தியில் முளைத்திடும்   
முதல் விண்மீனாய் மாறி
விடியலில் மறைந்திடும்
கடைசி விண்மீனாய் இருந்து
இருளின் தனிமையழகினை
இமைத்திடாது ரசித்திட ஆசை!

அந்தியிலும் விடியலிலும்
தவறாது நிகழ்கிறது
ஓவியக் கண்காட்சி
வான் திரையில்!

விசித்திர வர்ணக்கலவையால் 
சித்திரம் தீட்டிக் கொண்டே 
மறையும் பகலவன்
கடலாடிப் புத்தாடை
உடுத்திய குழந்தை போன்ற
அருணோதய ஆதவன்!





விடியலின் புதிய
ஓவியத் தீட்டலுக்காய் 
அந்தியின் பழைய 
ஓவியத்தைத் துடைத்து 
இருட்டெனும் 
கருமை பூசி 
வான் பலகையில்  
எவரும் கிறுக்கிடாது 
காவல் காத்திடும் கலை நிலா!

இன்றைய அந்தி 
நாளைய விடியலை 
எதிர் நோக்கியே...
காலத்தின் பயணம் 
என்றென்றும் தொடரும்...!


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).